இலங்கை இராணுவ அதிகாரிகளு்க்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதற்க எதிர்ப்பு கிளம்பி வரும் வேளையில் பாகிஸ்தான் இராணுவம் பயிற்சியளிக்க முன் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் கச்சதீவு மற்றும் இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் இலங்கை கப்பல் படை வீரர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துதல், மீன்களை பறிமுதல் செய்தல், படகுகளில் உள்ள நவீன உபகரணங்களை பறிமுதல் செய்வது மட்டுமல்லாமல், நீரில் மூழ்கடிக்கும் சம்பவங்கள் தொடர்நது நடத்தி வருகி்னறன. மேற்கண்ட நிகழ்வுகள் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருந்த போதிலும் இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க இந்திய அரசு முடிவு செய்தது.
இதனையடுத்து தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து இலங்கை இராணுவ வீரர்களுக்கு வேறு மாநிலங்களில் உள்ள இராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி மறுக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான இராணுவம் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாகிஸ்தானை சேர்ந்த இராணுவ தலைமை அதிகாரி அஸ்பக் பர்வேஸ் கயானி இலங்கைக்கு நல்லெண்ண பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தலைநகர் கொழும்பில் உள்ள இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியான ஜகத் ஜெயசூரியவை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளிடையே இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் இராணுவ ஒத்துழைப்பு நல்குவது உட்பட பல்வேறு விசயங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு தேவையான பயி்ற்சியை பாகிஸ்தானில் மேற்கொள்வது என முடிவானதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் பயிற்சி மறுக்கப்பட்ட நிலையில் எதிரி நாடான பாகிஸ்தான் இராணுவம் பயிற்சியளிக்க முன்வந்திருப்பது இந்தியாவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.