இலவச பஸ்பாஸ் வழங்க காலதாமதம் ஆவதால் அதுவரை பஸ்சில் மாணவர்கள் சீருடை அணிந்திருந்தால் அல்லது அடையாள அட்டை வைத்திருந்தாலோ அவர்களிடம் டிக்கெட் கேட்கவேண்டாம். பஸ்சில் பயணம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று கண்டக்டர்களுக்கு போக்குவரத்து கழகங்கள் உத்தரவிட்டுள்ளன.
தமிழக அரசு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு செல்வதற்காக பஸ்களில் செல்ல பணவசதி இல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்திவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ்பாஸ்களை வழங்கி வருகிறது. மொத்தம் 28 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படுகிறது.
பள்ளிக்கூட மாணவர்களை பொருத்தவரை கடந்த வருடம் படித்த அதே பள்ளியில் படிப்பை தொடரலாம். சிலர் வேறு பள்ளிக்கு செல்லலாம். சிலர் படிப்பை இடையில் நிறுத்தி இருக்கலாம். சில மாணவர்கள் துரதிருஷ்ட வசமாக உயிர் இழந்திருக்கலாம். இதுகுறித்து பள்ளிக்கூடங்களில் இருந்து போக்குவரத்து கழகங்களுக்கு தகவல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் பஸ்பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், அரசு பஸ்களில் பள்ளிக்கூட சீருடைகளில் பயணம் செய்யும் மாணவ-மாணவிகளிடம் சில கண்டக்டர்கள் பஸ் பாஸ் எங்கே? அடையாள அட்டை எங்கே என்று கேட்கிறார்கள். அடையாள அட்டைகள் தனியார் பள்ளி மாணவர்கள் வைத்திருப்பார்கள். அரசு பள்ளி மாணவர்கள் வைத்திருக்கமாட்டார்கள். இந்த இரண்டும் இல்லை என்ற உடன் டிக்கெட் எடுக்க கண்டக்டர்கள் சொல்கிறார்கள். டிக்கெட் எடுக்க காசு இல்லை என்று சொன்னால் உடனே அந்த மாணவர்களை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடுகிறார்கள்.
கடந்த வருடம் 3 லட்சத்து 45ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களில் இருந்து யார் யாருக்கு கொடுக்கவேண்டும் என்ற பட்டியல் வரவேண்டும். அதாவது ஏற்கனவே பஸ் பாஸ் பெற்ற மாணவர்களுக்கு அதே தகவலைக்கொண்டு வழங்கப்படும். எந்த மாணவர் புதிதாக உள்ளாரோ அவர் அதற்கான விண்ணப்ப படிவத்துடன் புகைப்படம் கொடுக்கவேண்டும். பள்ளிக்கூடங்களில் இருந்து பட்டியல் கொடுத்த 2 நாளில் பஸ் பாஸ் அனுப்பிவைக்கப்படும். இவ்வாறு கடந்த வாரம் வரை 55 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இலவச பஸ் பாஸ் மாணவர்களுக்கு கிடைக்கும் வரை அவர்கள் பஸ் பாஸ் இல்லாமல் பஸ்சில் பயணம் செய்யலாம். அவர்கள் சீருடை அணிந்திருந்தாலோ அல்லது அடையாள அட்டை வைத்திருந்தாலோ அவர்களை பஸ்சில் பயணம் செய்ய அனுமதிக்கவேண்டும். இடையில் அவர்களை பஸ்சில் இருந்து டிக்கெட்டுக்காக கீழே இறக்கி விடக்கூடாது என்று போக்குவரத்து கழகங்கள் கண்டக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.