புத்தகாயா குண்டு வெடிப்பு: இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிர்ச்சி!

RAJAPAKSA

bodhgayabudakayanitish cm

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள புத்தகாயாவின் மகாபோதி பெளத்த வழிபாட்டுத் தலத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆழ்ந்த கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளார்.

இச்சம்பவத்தைக் கேள்வியுற்றதும் உடனடியாக புத்தகாயாவின் மகாபோதி பெளத்த வழிபாட்டுத் தலத்தில் அச்சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகி இருந்த தேரர் ஒருவருடன் தொடர்பு கொண்ட இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இச்சம்பவம் குறித்த விபரங்களை கேட்டறிந்ததுடன். இச் சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையையும் தெரிவித்தார் என்று இலங்கை ஜனாதிபதியின் பேச்சாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால் ஆக வேண்டியவை தொடர்பாகக் கேட்டறிந்த மஹிந்த ராஜபக்ச, அவை தொடர்பாக தமக்கு அறியத் தருமாறும் கேட்டுக் கொண்டதாகவும் ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்தார்.  

இந்தியாவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்துடன் தொடர்புகொண்ட ஜனாதிபதி, இச்சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து தமக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும், இதுவரையும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், இனிமேல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து பார்க்குமாறும் உயர்ஸ்தானிகருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். 

இச்சம்பவம் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துமாறும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸுக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அவர் கூறினார்.

மத வழிபாட்டுத் தலங்களையும், அப்பாவி பக்தர்களையும் இலக்கு வைத்து பயங்கரவாத செயலை மேற்கொள்வதானது சமாதானத்தை மதிக்கும் முழு உலகத்தை மாத்திரமல்லாமல் மனித வர்க்கத்தையே அவமதிக்கும் செயல் என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலுமுள்ள பெளத்தர்களின் புனித இடமான இந்தியாவின் புத்தகாயா புனித பூமியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி தமது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கும் வகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெளத்த மத வழிபாட்டுத் தலங்களில் மாத்திரமல்லாமல் எந்த வழிபாட்டுத் தளத்திலும் உலகின் எந்த இடத்திலும் இப்படியான மோசமான செயல் இடம்பெறக் கூடாது என்றும் இப்படியான செயலைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தை கேள்வியுற்று தாம் ஆழ்ந்த கவலைக்கு உள்ளானதுடன், இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு தமது அனுதாபங்களையும் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் கூறினார்.

Leave a Reply