திருச்சி மாவட்டம் முசிறியில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கிவருகிறது. இக்கல்லூரியில் மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கும் வசதி இருக்கிறது. ஆனால் கல்லூரி முதன்மை விடுதி கடந்த ஜூலை 1-ம் தேதி திறக்கும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் அன்று தண்ணீர் இல்லை என்ற காரணத்தினால் விடுதி திறக்கப்படவில்லை.
அதன் பிறகு கடந்த 4-ம் தேதி திறக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் சொன்னபடி அன்றும் விடுதி திறக்கப்பட வில்லை. இதனால் கடந்த ஜூலை 5-ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி முதல்வர், கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து 08/07/2013 திங்கள் கிழமை அன்று மதிய உணவுடன் விடுதி திறக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் அன்றும் விடுதி திறக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் முறையிட்ட போது இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இருப்புத் தொகை இல்லை என்றும், அனைத்து மாணவர்களும் உடனடியாக இருப்புத் தொகையை செலுத்த வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியது. இதனால் வெறுப்படைந்த மாணவர்கள் இன்று (09/07/2013) சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் முசிறி – புலிவலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார்கள்.
– P. மோகன்ராஜ்