பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரி துறை மந்திரி பொறுப்பையும் வகித்தபோது, நாட்டில் உள்ள 164 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.85 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.எம். லோதா, மதன் பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ.க்கு தன்னாட்சி வழங்குவது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைபற்றிய பிரமாண பத்திரத்தை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். மத்திய அரசின் இந்த பிரமாண பத்திரத்தை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:- நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழிகாட்டும் குழு எடுத்த முடிவுகள் தொடர்பான ஆவணங்கள் இல்லாத நிலையில், இந்த வழக்கு விசாரணையில் சி.பி.ஐ. போராடிக்கொண்டிருப்பதாக தெரிகிறது. வழிகாட்டும் குழு எடுத்த முடிவுகளில் நிறைய குறைபாடுகள், பலவீனங்கள் உள்ளன.
இந்த பிரமாண பத்திரத்துக்கு ஆதாரமாக அமைந்துள்ள ஆவணங்களை அரசு தாக்கல் செய்யவில்லை. நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணையில் சி.பி.ஐ.க்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தர வில்லை. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முழுமையான பதிலை மத்திய அரசு அளிக்கவில்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
சி.பி.ஐ.க்கு தன்னாட்சி வழங்க எடுத்துள்ளதாக கூறும் நடவடிக்கைகள் குறித்த மத்திய அரசின் பிரமாண பத்திரம் பற்றி சி.பி.ஐ. வரும் 16–ந்தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான 36 வழிகாட்டும் குழு கூட்ட ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
164 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை நியாயப்படுத்தும் அனைத்து ஆவணங்களுடன் 4 வாரத்தில் முழுமையான பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில், மத்திய அரசின் மீது சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் வெளியிட்டுள்ள நிலையில் சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா, இந்த வழக்கில் இருந்து விலகிக்கொண்டு விட்டார்.