என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவினைக் கண்டித்து, கடந்த 3-ம் தேதி முதல் என்.எல்.சி. தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் தொடர்ந்தால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.எனவே, போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர தொழிற்சங்கங்க நிர்வாகிகளுடன் என்.எல்.சி. நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இன்று (12.07.2013) சென்னையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், போராட்டத்தை தீவிரப்படுத்த தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். திட்டமிட்டபடி நெய்வேலி கியூபாலம் அருகில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தொழிலாளர்கள் அறிவித்தனர். இந்நிலையில், தொழிலாளர்களின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. போராட்டம் நடத்த டி.எஸ்.பி. உமா மகேஸ்வரி தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, காமராஜர் திடலில் உண்ணாவிரத பந்தல் அமைக்கும் பணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் நெய்வேலியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.