என்.எல்.சி பங்குகளை வாங்குவது தொடர்பாக தமிழக உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், என்.எல்.சி.யின் 5% பங்குகளை தமிழகத்துக்கே விற்பது குறித்து நான் எழுதிய கடிதத்துக்கு நீங்கள் அனுப்பிய பதில் கடிதத்தில், என்.எல்.சி பங்குகளை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக அதிகாரிகள் குழுவை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், நிதித் துறை முதன்மைச் செயலாளர், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தொழில்துறை கூடுதல் செயலாளர் ஆகியோர் அடங்கிய தமிழகக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்குழுவினர், ஜூலை 15-ம் தேதி செபிக் குழுவினரை மும்பையில் சந்தித்துப் பேசி, பங்குகள் விற்பனை தொடர்பாக அனைத்து விவரங்களையும் முடிவு செய்வார்கள். பங்குகள் விற்பனை தொடர்பான அனைத்து விவகாரங்களும், அன்றைய சந்திப்பின் போது இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், என்எல்சி பங்குகள் விற்பனை தொடர்பாக எழுந்துள்ள பிரச்னை சுமூகமாக முடியும் என்றும், நெய்வேலியில், தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.