கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கையிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை வாங்கியுள்ளதாக இந்திய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி எழுத்து மூலம் நேற்று (12.08.2013) அளித்த பதில் ஒன்றிலேயே, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவின் முப்படைகளுக்கும் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயுதங்களை வாங்குவதற்கு 2.35 இலட்சம் கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யா, இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா, போலந்து, சுலோவாக்கியா, பின்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்தே இந்த ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளன.
ரஸ்யாவில் இருந்து கூடுதலாக, ஒரு இலட்சம் கோடி ரூபாவுக்கு ஆயுதங்களை வாங்கியுள்ளது இந்தியா.
2010 தொடக்கம் 2013 வரையான காலப்பகுதியில், இந்திய இராணுவத்துக்கே அதிகளவில், ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதற்காக 1.92 இலட்சம் கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையிடம் இருந்து எத்தகைய ஆயுதங்கள் வாங்கப்பட்டன, அதற்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்ற தகவல் இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கையில் இடம்பெறவில்லை.