மும்பை கடற்படை தளத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கப்பல் நிறுத்தும் தளத்தில் ஐ.என்.எஸ். சிந்துரக்ஸாக் என்ற அதி நவீன நீர்மூழ்கி கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 3 அதிகாரிகள் உள்பட 18 கடற்படை வீரர்கள் இருந்தனர். அந்த கப்பலில் இருந்து, நேற்று (13.08.2013) இரவு திடீர் என்று பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனே கப்பலில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மும்பையில் இருந்து 16–க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் கடற்படை தளத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கப்பல் அடியோடு எரிந்து நாசமானது. தீப்பிடித்ததும் உள்ளே இருந்த ஆக்ஸிஜன் பயங்கரமாக எரிந்தது. இதனால் கப்பல் முழுவதும் எரிந்து மூழ்கி விட்டது.
கப்பலில் இருந்த 18 கடற்படை வீரர்களும், கப்பலில் தீப்பிடிக்க தொடங்கியதும் அவர்கள் உயிர்தப்ப கடலில் குதித்ததாக கூறப்பட்டது. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. நீண்ட நேரம் போராடியும், அவர்களை உயிருடன் மீட்க முடியவில்லை.
இதுதொடர்பாக கடற்படை தளபதி டி.கே.ஜோஷி மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மும்பை நீர்மூழ்கி கப்பல் விபத்தில் 18 மாலுமிகள் உயிரிழந்தனர். கப்பலில் வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான விளக்கம் இப்போது அளிக்க இயலாது. ஆனால், கப்பலில் சிறிய அளவில் ஏற்பட்ட தீயால் பெரிய அளவில் தீ பிடித்திருக்கலாம்.
அடுத்தடுத்து 2 வெடிவிபத்துகள் ஏற்பட்டதால் மளமளவென தீ பரவியுள்ளது. வெடிவிபத்தை தொடர்ந்து கப்பலுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. இதன் காரணமாக கப்பல் நீரில் மூழ்கி தரைதட்டி நின்றுவிட்டது. இந்த கப்பல் கடந்த மாதம் தான் முழு அளவிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.