தமிழகமே எனது குடும்பம்; தமிழ்நாட்டு மக்களே என் பிள்ளைகள்; தமிழக மக்களின் நலனே என் நலன்: முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின உரை!

pr150813cpr150813apr150813dசென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு:

67-வது சுதந்திர தின நன்னாளில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்ததில் பெருமிதம் அடைகிறேன்.  இந்த வாய்ப்பை நல்கிய தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். சுதந்திரம் என்ற வார்த்தையே நமது மனங்களில் மட்டற்ற மகிழ்ச்சியையும், பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது.  இப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான சுதந்திரத்தைப் பெற ஆங்கிலேயர்களுக்கு எதிராக தமிழகத்திலிருந்து முதலில் குரல் கொடுத்தவர்கள் பாளையக்காரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவர், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை ஆகியோரின் புரட்சி மகத்தானது. இதுவே சுதந்திரப் போராட்டத்திற்கான முதல் வித்தாக அமைந்தது.

இந்திய அளவில், சர்தார் வல்லபாய் பட்டேல், பாலகங்காதர திலகர், அண்ணல் அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என பல தலைவர்கள் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டுள்ளனர்.  இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்ரமண்ய பாரதியார், திருப்பூர் குமரன், தீரர் சத்தியமூர்த்தி, சுப்ரமண்ய சிவா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அயல்நாட்டு வீராங்கனை அன்னி பெசன்ட் அம்மையார், மாவீரன் வாஞ்சிநாதன் என எண்ணற்ற தலைவர்கள் ரத்தம் சிந்தியும், உயிரைக் கொடுத்தும் ஆங்கிலேயரிடமிருந்து  சுதந்திரத்தை நமக்குப் பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்த விடுதலைத் திருநாளில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தியாகிகளுக்கும் என்னுடைய வீர வணக்கத்தினை செலுத்துகிறேன்.

சுதந்திரம் என்பது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி சுதந்திரம், வேலைவாய்ப்பு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சமூக, பொருளாதார காரணிகளால் ஒடுக்கப்படாமல் ஒவ்வொரு தனி மனிதருக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணரச் செய்வதே உண்மையான சுதந்திரத்திற்கான இலக்கணம். இப்படிப்பட்ட தனி மனித ஆற்றலை வெளிக் கொணருவதில் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது.

எனவே தான் அனைவரும் கல்வி பயிலும் வண்ணம் கட்டணமில்லாக் கல்வி; கட்டணமில்லா பேருந்து வசதி, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், ஒரு இணை காலணி, நான்கு இணை சீருடைகள், நில வரைப்படப் புத்தகம் போன்றவை வழங்கப்படுகின்றன. மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியர் தங்களின் அறிவாற்றலை பெருக்கிக் கொள்ள மடிக்கணினி வழங்கப்படுகிறது. இடை நிற்றலை அறவே நீக்கும் வகையில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ – மாணவியருக்கு மொத்தம் 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1,075 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. எனது தலைமையிலான அரசின் இது போன்ற நடவடிக்கைகளின் காரணமாக கல்வி பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

புதிய பள்ளிகளை ஏற்படுத்துவதுடன், பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு  கடந்த 2 ஆண்டுகளில், 51,757 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிகள் அதிக அளவு இல்லாத பகுதிகளில் உள்ள மாணவ மாணவியர்,  உயர்கல்வி பெறும் வகையில் 11 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் ஒரு பொறியியல் கல்லூரி சென்ற ஆண்டு துவங்கப்பட்டுள்ளன. அதே போன்று, இந்த ஆண்டு 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்; 2 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்; 3 அரசு பொறியியல் கல்லூரிகள்; 11 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள்; தேசிய சட்டப் பள்ளி மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவை துவங்கப்படும். மேலும், மீனளப் பல்கலைக்கழகம், 2 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், 6  கால்நடை ஆராய்ச்சி மையங்கள் மற்றும் 2 மீன்வள தொழில்நுட்ப நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கல்வி அறிவுடன் உடல் வலிமையும் பெற்றிருத்தல் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழக மக்கள் அனைவருக்கும் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் பல நடவடிக்கைகளை  உங்கள் அன்புச் சகோதரியின் அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.  கடந்த 2 ஆண்டுகளில் புதிதாக 47 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதிகள் கொண்ட, மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தொற்றா நோய்களுக்கான பரிசோதனை மற்றும் தொடர் சிகிச்சை வழங்கும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ், இந்தியாவிலேயே மிக அதிக அளவாக 12,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.  இதில் 4,000 ரூபாய் கர்ப்ப காலத்தின் போதும்; 4,000 ரூபாய் அரசு மருத்துவமனைகளில் குழந்தையை பெற்றெடுக்கும் போதும்; குழந்தைகளுக்கான அனைத்து தடுப்பூசிகளும் கொடுக்கப்பட்டவுடன் 4,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.  இதன் காரணமாக தாய் இறப்பு விகிதம், சிசு இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், 31.7.2013 வரை சுமார் 15 லட்சத்து 31 ஆயிரம் தாய்மார்களுக்கு 1,339 கோடியே 36 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, நடமாடும் மருத்துவமனை திட்டம்; மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கென மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்; 24 மணி நேரமும் செயல்படும் `சீமாங்க்’ மையங்களின் வசதிகளை மேம்படுத்தும் திட்டம்; அவசர கால ஊர்தி சேவை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்கள் சிறந்த மருத்துவ சேவை பெற்றிடும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆண்டொன்றுக்கு 750 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏறக்குறைய 4 லட்சத்து 16 ஆயிரம் பயனாளிகள் சுமார் 916 கோடி ரூபாய் அளவுக்கு இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

 இது மட்டுமல்லாமல், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை உருவாக்கும் வகையில் உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. நுண்ணீர் பாசனத்திற்கு, சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம்; இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம்; பயிர் வாரியான நவீன தொழில்நுட்ப உத்திகளை கடைபிடித்தல்; வேளாண்மையை இயந்திரமயம் ஆக்கல்; பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை குறைந்த வாடகையில் வழங்குதல்; நிலத்தடி நீர் செறிவூட்டு கட்டுமானங்கள் அமைத்தல் என பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை உங்கள் அன்புச் சகோதரியின் அரசு எடுத்துள்ளது. 17 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அந்த தொழில் நிறுவனங்கள் இங்கே தொழில் துவங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் மூலம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும்.  இது மட்டுமல்லாமல், தென் தமிழ்நாட்டில், தொழில் வளர்ச்சியை உருவாக்கும் நோக்கில் பல்வேறு தொழிற் பூங்காக்களை அமைத்திட உத்தரவிட்டுள்ளதோடு, அங்கு தொழிற்சாலைகளை அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் அப்பகுதிகளில் தொழில் வளர்ச்சி பெருகுவதோடு லட்சக்கணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகும். எனது தலைமையிலான அரசின் வெளிப்படையான அணுகுமுறை காரணமாக தொழில் துறையில் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. “தமிழ்நாட்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை எய்துதல்”, என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை சமர்ப்பித்த The Associated Chambers of Commerce and Industry of India, என்ற அமைப்பு; அரசு, தனியார் மற்றும், பொதுத் துறை ஆகியவை 2012-2013 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 815 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளது.

திருமயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாரத மிகுமின் நிறுவனத்தின் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசிய பிரதமர், தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும்; மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு விளங்குகிறது என்றும் தெரிவித்து இருக்கிறார் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.


வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வரும் அதே சமயத்தில், ஏழைத் தாய்மார்களின் நலன் காக்கும் வகையில் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. வீட்டு வசதியை பெருக்கும் வகையில் பசுமை வீடுகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.  நெசவாளர்களுக்கென 10,000 வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. வெண்மைப் புரட்சியை ஏற்படுத்தும் வகையிலும்; கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இது தவிர, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 500 ரூபாய் ஓய்வூதியத்தை 1,000 ரூபாயாக எனது அரசு வழங்கி வருகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வந்தாலும், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை;  பெட்ரோல் – டீசல் விலை நிர்ணயக் கொள்கை; ஊட்டச்சத்து அடிப்படையிலான உர மானியக் கொள்கை; அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை; மானிய விலையிலான சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல் போன்றவற்றின் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதாலும்; மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையை அடிக்கடி உயர்த்துவதாலும்; அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. இந்த விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய, சாமானிய மக்களை காப்பாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை உங்கள் அன்புச் சகோதரியின் அரசு எடுத்துள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மாதம் ஒன்றுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி; மானிய விலையில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சர்க்கரை;  அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலமாக அரிசி கிலோ ஒன்றிற்கு, 20 ரூபாய் என்ற விலையில் வெளிச்  சந்தையில் விற்பனை; காய்கறி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு அமைப்புகள் மூலமும், தோட்டக்கலைத் துறை மூலமும், விவசாயிகளையும், நுகர்வோரையும் நேரடியாக இணைக்கக் கூடிய பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள்; சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரி முழுவதுமாக ரத்து; அனைத்து மாநகராட்சிகளிலும் குறைந்த விலையில் சிறந்த உணவு வகைகளை வழங்கும் அம்மா உணவகங்கள் என பல்வேறு விலைவாசி குறைப்பு நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன்.

தற்போது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்திற்கே பங்கம் விளைவிக்கும் வகையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற முனைந்துள்ளது. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டில் தற்போது குடும்ப அட்டைகள் மூலம் வழங்கப்படும் அரிசியில் 1 லட்சம் டன் அரிசி அளவுக்கு பற்றாக்குறை ஏற்படும். எனவே, இதில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள நான் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளேன். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்பதை இந்த நேரத்தில் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்லாமல், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது; என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்கப்படாமல் தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களே வாங்க வழிவகை செய்தது; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் சார்பில் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றம் முன் எடுத்து வைத்தது என தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டும் உன்னதமான சாதனைகளை இந்த அரசு செய்திருக்கிறது. அதே வழியில் கச்சத் தீவில் நமக்குள்ள உரிமையை நாம் நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சுதந்திரத்தை பெற்றுத் தந்த தலைவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு மணி மண்டபங்களும், திருவுருவச் சிலைகளும் எனது ஆட்சிக் காலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சுதந்திரப் போராட்ட தியாகிகளை கவுரப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இந்த அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களை மேலும் கவுரவப்படுத்தும் வகையில் தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 7,000 ரூபாய் ஓய்வூதியம் 1.8.2013 முதல் 9,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும்; சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் 3,500 ரூபாயிலிருந்து 4,500 ரூபாயாக உயர்த்தப்படும். சுதந்திரக் காற்றை சுதந்திரமாகவும், பெருமையுடனும் அனுபவித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் அறுபத்து ஏழாம் ஆண்டு சுதந்திர தின விழா நல்வாழ்த்துகளை  மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகமே எனது குடும்பம்; தமிழ்நாட்டு மக்களே என் பிள்ளைகள்;  தமிழக மக்களின் நலனே என் நலன் என்று கூறி; வாழ்க பாரத மணித் திருநாடு! வளர்க செந்தமிழ் நாடு! என்று உரையாற்றினார்.

Leave a Reply