இலங்கையில் இள வயதில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதிய (யுனிசெப்) நிபுணர் குழு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இள வயது திருமணங்கள் நடைபெறுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழி வகைகள் குறித்த சிறந்த புரிந்துணர்வை எட்டும் வகையில் ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் (யுனிசெப்) தரம் தழுவிய விசாரணையொன்றை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கென குழுவொன்றை நியமித்திருந்தது.
இலங்கையில் குறிப்பாக அபிவிருத்தி குன்றிய மாவட்டங்களில் இள வயது திருமணங்களும் சட்டபூர்வமான கற்பழிப்புச் சம்பவங்களும் அதிகரித்துக்காணப்பட வாய்ப்புக்கள் உள்ளதெனச் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்றை அடிப்படையாகக் கொண்டே மேற்படி விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
இத்தகைய இள வயதுத்திருமண முறையானது சிறுமியர் தங்கள் கல்வியைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புக்களை மட்டுப்படுத்தி வருவது மட்டுமின்றி, கர்ப்ப காலத்திலும் பிரசவ காலத்திலும் தாய் மற்றும் குழந்தைக்கு அபாயம் ஏற்படக்கூடிய நிலை, குழந்தைகள் மத்தியில் காணப்படும் போஷாக்கின்மை மற்றும் பிந்திய அறிவு வளர்ச்சி உள்ளிட்ட எதிரிடையான தேகாரோக்கிய விளைவுகளுடனும் அது அடிக்கடி தொடர்புடையதாக விளங்கி வருவது குறித்தும் கண்டறியப்பட்டுள்ள இத்தகைய விடயங்கள் யுனிசெப் நிறுவனத்தை கரிசனை செலுத்த வைத்துள்ளன.
இது குறித்து இலங்கையில் உள்ள யுனிசெப் நிறுவனப் பிரதிநிதி ரெஸா ஹொசெய்னி தெரிவிக்கையில், இள வயது திருமணம் செய்யும் சிறுமியரும் அதிகரித்த வகையிலான வன்முறை, அவதூறு மற்றும் சுரண்டல் ஆகியவற்றுக்கு உள்ளாகி வருவதாக குறிப்பிட்டார்.
இத்தகைய இள வயது திருமணங்களால் பாதிக்கப்பட்டுள்ள 71 பேர் குறித்த பகுப்பாய்வொன்றை அடிப்படையாக கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் மேற்கெள்ளப்பட்டுள்ள தரம் சார் விசாரணைகள் மூலம் இள வயது திருமணங்கள் அதிகரித்த நிலையில் நிகழ்ந்து வருவதாகவும் பராயம் அடையாதவர் பாலியல் தொடர்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வி காணப்பட்டிருந்த 71 சிறுமியருள் 21 பேர் (30%) பதினெட்டு வயதை அடைவதற்கு முன்னரே கர்ப்பம் தரித்திருந்தமை தெரிய வந்துள்ளது. இது தேசிய சராசரியை விட 20 சதவீத உயர்வாகும்.
நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகளில் இளம் பருவத்தினருக்கான பயன் தரும் இன விருத்தி சுகாதார சேவைகள் மற்றும் தகவல் வழங்கல் சேவைகள், இள வயது திருமணத்தின் விளைவு பற்றிய தெளிவூட்டல் பற்றிய இயக்க செயற்பாடுகள் பலவந்தமாக திருமணம் செய்தல் மற்றும் இளம் வயதில் கர்ப்பம் தரித்தல் சம்பந்தமான சட்டத்தை மீளாய்வு செய்தல் என்பன அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.