சிங்கப்பூரில் கத்தி முனையில் திருடப்பட்ட பணப்பை நால்வரின் சமயோசித உதவியால் மீண்டும் பாதிக்கப்பட்டவரிடமே திரும்பியது. திருட்டுச் சம்பவதில் ஈடுபட்ட 52 வயது ஆடவர் அகப்படக் காரணமாக இருந்த நால்வருக்கும் நேற்று(15.08.2013) பொது உணர்வு விருது வழங்கப்பட்டது.
அவர்களில் இருவர் சிங்கப்பூர் நிரந்தர வாசிகளான வேலுசாமி சேசகுமார், நிரஞ்சன் நந்தகோபன் ஆகியோர். செயிண்ட் மைக்கல்ஸ் ரோடு அருகே உள்ள சிராங்கூன் ரோட்டில் நேற்று (15.08.2013) பிற்பகல் 2.15 மணிஅளவில் வேலைக்குச் செல்ல டாக்சிக்காக காத்திருந்தார் அனுஷா மூர்த்தி, அப்போது அவரைக் கடந்து சென்ற சீன ஆடவர் ஒருவர் அவரிடம் ஏதோ கேட்பதுபோல் வந்து தாம் அணிந்திருந்த மேல்சட்டையிலிருந்து வெள்ளைத் துணி ஒன்றை எடுத்தார். துணியை அகற்றி அதற்குள் இருந்த கத்தியைக் காட்டி, அனுஷாவின் கைபேசியைப் பிடுங்க முயன்றார்.
பதற்றத்தில் அனுஷாவின் கையிலிருந்த பணப்பை தவறி கீழே விழ, அதை எடுத்துக்கொண்டு அந்த ஆடவர் ஓடினார். அந்த நேரத்தில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த மூவர் ஏதோ அசம்பாவிதம் நடப்பதை உணர்ந்து அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஓடியத் திருடனைப் பிடித்தனர். பணப்பையைத் திரும்பப் பெற்று அனுஷாவிடம் ஒப்பத்தனர்.