ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ பயணம் திட்டம் குறித்து அவரது பேச்சாளர் ருபேட் கொல்வில்லி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம், 31ஆம் திகதி வரையில் நவநீதம்பிள்ளை இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்க அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களை நவம்பிள்ளை சந்தித்துப் பேசவுள்ளார்.
மேலும், இலங்கை நீதித்துறையின் மூத்த அதிகாரிகளையும், தேசிய மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்களையும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய செயற்திட்டத்தை கண்காணிக்கும் குழுவின் உறுப்பினர்களையும் நவநீதம்பிள்ளை சந்திக்கவுள்ளார்.
எதிர்வரும் 31ஆம் திகதி தனது இலங்கைப் பயணத்தை நிறைவு செய்து கொள்ளும் நவநீதம்பிள்ளை, கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.