வீராணம் ஏரியில் இருந்து சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக நீர் திறந்து விட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கு வகை செய்ய “புதிய வீராணம் திட்டம்” 2004-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடும் போது அந்தத் தண்ணீர் வீராணம் ஏரியில் பெறப்பட்டு, அப்பகுதியின் பாசனத்திற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 2.8.2013 முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டிருந்தார். தற்போது, மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதன் காரணமாக வீராணம் ஏரியில் 935.20 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
எனவே, வீராணம் ஏரியிலிருந்து 17.8.2013 முதல் சென்னை மாநகர குடிநீருக்காக நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் கிடைக்க வழிவகை ஏற்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.