பவானி அணையில் இருந்து பாசனத்துக்காக ஆக., 23-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்டபிரதான கால்வாய் மற்றும் நீட்டிப்புக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலமாகவும், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப் படை மதகுகள் மூலமாகவும் முதல்பருவ நன்செய் ஆயக்கட்டு நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மற்றும் நீட்டிப்புக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலமாகவும், சென்ன சமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாகவும் முதல்பருவ நன்செய் ஆயக்காட்டு நிலங்களுக்கு 23.8.2013 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.
இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.