பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 365 இந்தியக் கைதிகளை 24.08.2013 சனிக்கிழமை விடுதலை செய்யப்போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. கராச்சி மிலிர் மாவட்ட சிறையிலிருந்து 340 மீனவர்களும், பலூசிஸ்தான் கட்டானி சிறையிலிருந்து 25 படகுப்பணியாளர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரின் தண்டனைக்காலம் முடிவடைந்து விட்டதால், இந்தியாவுடனான ஒப்பந்தப்படி வரும் ஞாயிறு அன்று வாக எல்லை வழியாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு நாட்டு உள்துறை, வெளியுறவு துறை மற்றும் எல்லை மாநில பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் இவர்கள் 365 பேரும் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திவரும் நிலையில் அங்கு பதட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் வாக எல்லை வழியாக அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.