சிதம்பரம் தேரடி தெருவில் சதீஷ்குமார் என்பவர் நிலக்கரி சாம்பலில் இருந்து செங்கல் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்துக்கு கடலூர் மாவட்ட வணிக வரித்துறை அதிகாரி ராஜேஸ்வரி வந்து கணக்கு வழக்குகளை சரிபார்த்தார். அந்த நிறுவனத்துக்கு வரி குறைப்பு செய்திருப்பதாகவும், அதற்கு ரூ.8 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என்றும் நிறுவன உரிமையாளர் சதீஷ்குமாரிடம் கேட்டார்.
அதற்கு அவர் முதல் தவணையாக ரூ. 1½ லட்சம் தருவதாக அதிகாரியிடம் கூறினார். பின்னர் வணிக வரித்துறை அதிகாரி அந்த பணத்தை நாளை காலை சிதம்பரம் தேரடி வீதிக்கு கொண்டு வந்து தரும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சதீஷ்குமார் புகார் செய்தார். வணிக வரித்துறை அதிகாரியை போலீசார் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி இன்று காலை தேரடி வீதிக்கு வந்த அதிகாரி ராஜேஸ்வரியிடம் நிறுவன ஊழியர் ரூ.1½ லட்சம் ரூபாயை கொடுத்தார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், பெருமாள், சண்முகம் ஆகியோர் ராஜேஸ்வரியை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவர் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.