மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி மெயின் ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே கேரளா மாநிலத்தவருக்கு சொந்தமான ஆயுர்வேத மருந்தகம் உள்ளது. இங்கு பல மூலிகை செடிகள் மூலம் மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (24.08.2013) அதிகாலை 3½ மணியளவில் திடீரென ஆயுர்வேத மருந்தகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. உடனே அங்கிருந்த ஆயுர்வேத மருந்தக நிர்வாகிகள் விபத்து குறித்து திடீர் நகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஆனால் மூலிகை பொருட்கள் உள்ளே இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதன் காரணமாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இதையடுத்து கூடுதலாக தல்லாகுளம், திருமங்கலம் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 40–க்கும் மேற்பட்ட வீரர்கள் 5 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் மருந்தக குடோனில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மூலிகை மருந்துகள், செடிகள், பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.
விபத்து குறித்து திருநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்