இறுதிப்போர் இடம்பெற்று ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் போரின் வடுக்கள் இவ்வளவு என்றால் அந்தபோரின் தாக்கம் எப்படியானதாக இருந்திருக்கும்? என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை எண்ணத்தோன்றாத வண்ணம் போர்த் தடயங்களை அவசர அவசரமாக அழிக்கின்றது இலங்கை அரசு .
இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களாகக் கிடந்த வாகனங்கள் மற்றும் பொருள்கள் கடந்த சில நாள்களாக வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் வருகைக்கு முன்பாக இவை அகற்றப்படுகின்றன. இராணுவத்தினர் போன்று உடையணிந்தவர்களே போர் எச்சங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பணிகள் மிக வேகமாக மேற்கொள்ளப்படுகின்றன. அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் இதனை ஒளிப்படம் எடுக்க முற்பட்டால் விரட்டப்படுகின்றனர்.
இறுதிப் போரில் கைவிடப்பட்ட பல நூற்றுக்கணக்கான வாகனங்களின் சிதைந்த பகுதிகள் போர் எச்சங்களாக கரையாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் வீதியோரமாகக் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றில் பெரும் பகுதி கடந்த திங்கட்கிழமை இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் அங்கிருந்து அகற்றப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர்.
இது தவிர புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானம், சதந்திரபுரம் விளையாட்டுக்கழக மைதானம் ஆகியவற்றிலும் போரில் சிதைந்த வாகனங்களின் பாகங்கள் குவிக்கப்பட்டிருந்தன.
இவைவெளியே தெரியாதவாறு மூடி பெரிய மறைப்புக்களை இராணுவத்தினர் ஏற்படுத்தி வருகின்றனர்.
இலங்கைக்கு 25 ஆம் திகதி வருகை தரும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை 27 ஆம் திகதி வடக்குக்கான தனது பயணத்தை ஆரம்பிப்பார். முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. தனது பயணக் காலத்தில் பெரும் பகுதியை அவர் வடக்கிலேயே செலவிடுவார் என்று இலங்கை அரசு கூறியிருக்கிறது.