ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று (25.08.2013) காலை 9.50 மணியளவில், ஜேர்மனியிலிருந்து யுஎல் 558 என்ற விமானம் மூலம் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று பெலாரஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்று நாள் பயணமாகவே பெலாரஸ் செல்கிறார். இதன்போது, அந்த நாட்டின் அதிபர் அலெக்சான்டர் லுகாசென்கோ, பிரதமர் மிகையில் மியாஸ்னிகோவிச், பெலாரஸ் தேசிய சட்டசபையின் தலைவர் அனரோலி ருபினோவ், உள்ளிட்டோரைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
முன்னாள் சோவியத் குடியரசான பெலாரஸ், அதிபர் வேட்பாளர் உள்ளிட்ட எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்களை சிறையில் அடைத்தல், மற்றும் மாற்றுக் கருத்துரையோருக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அதன் மீது தடைகளை விதிக்க வலியுறுத்தி வருகின்றன.
ஐரோப்பிய நாடுகளின் தடைகளை எதிர்கொண்டுள்ள பெலாரஸ் நாட்டுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று காலை சிறிலங்கா வரவுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச கொழும்பில் இருந்து புறப்படவுள்ளார்.
நவநீதம்பிள்ளைக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு வரும் 30ம் நாள் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.