சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் போராளிகள் வசமுள்ள பகுதிகளில் நூற்றூக்கணக்கான பொதுமக்கள் விஷக்குண்டுகள் தாக்கியதில் மூச்சுதிணறி உயிரிழந்தனர். அதற்கான வீடியோ ஆதரங்களும் வெளியிடப்பட்டன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசு வீசிய விசக்குண்டு தாக்குதல்களில் 355 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது. ஆனால் எதிர்க்கட்கிகளோ 1300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகிவிட்டதாக தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்த தீர்மானித்துள்ளது. இதையடுத்து மத்தியத்தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் ஆயத்த நிலையில் உள்ளன. அமெரிக்கா தலைமையில் சிரியா மீது தாக்குதல் நடத்த இப்பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் படைகளும் தயாராகி வருகின்றன.
அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி கப்பல் மத்தியத்தரைக்கடலுக்கு விரைந்தது. மத்தியத்தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள யூ.எஸ்.எஸ். ஹாரி எஸ். ட்ரூமான் என்ற விமானந்தாங்கி கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலுக்கு விரைகிறது. இது அங்கிருந்து சிரியா மீது தாக்குதல் நடத்தும்.
இந்த கப்பலுக்கு பாதுகாப்பாக செல்லும் மற்ற சிறு கப்பல்களும் ஏவுகணைகளை வீசி தாக்கும். மேலும் ஜோர்டானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள எப்.16 ரக போர் விமானங்கள் பல்முனை தாக்குதலில் ஈடுபடும் என அஞ்சப்படுகிறது.
மத்தியத்தரைக்கடல் டவுலான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் சிரியா மீது தாக்குதலுக்கு தயாரான நிலையில் உள்ளது. மேலும் ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மிராஜ் மற்றும் ரபேல் ஜெட் விமானஙகள் சிரியாவின் மீது தாக்குதல் நடத்தும் என்று கூறப்படுகிறது.
மத்தியத்தரைக்கடலில் பிரிட்டன் ஒரு நீர்மூழ்கி கப்பலை நிறுத்திவைத்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்தும் அவசியம் ஏற்பட்டால் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை இத்தாக்குதலுக்கு பயன்படுத்த கூடும். சைப்ரஸ் ஒத்துக்கொண்டால் அதன் ராணுவத்தளத்தை பிரிட்டன் பயன்படுத்தும் என்றும் தெரியவருகிறது.
இந்நிலையில், சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்குதல் நடத்தினால், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் தீப்பற்றி எரியும் என சிரியா எச்சரித்துள்ளது.