“வர்த்தகர்கள் என்ற பெயரில் இலங்கை வடக்கில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக இந்தியாவிலிருந்து வருகை தரும் இந்திய புலனாய்வு அதிகாரிகள், வடக்கின் நிலவரங்களை புலனாய்வு செய்து வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது” என்று வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்தார்.
‘வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களைக் கொண்டுள்ள வெளிநாட்டுப் பிரஜைகள் பலர் ஓமந்தை சோதனைச் சாவடியைக் கடந்து வடக்கு நோக்கிப் பயணிக்கின்றனர். இவ்வாறு நாட்டுக்குள் உட்பிரவேசிக்கும் வெளிநாட்டுக் குழுவினர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கைக்கும் எதிராக சில நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரம் கணித்துக்கொண்டிருக்கின்றனர்’ என்றும் கட்டளைத் தளபதி குறிப்பிட்டார்.
“இவ்வாறு வடக்குக்குச் செல்லும் வெளிநாட்டவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது தொடர்பில் விரிவாக தேடியறிய வேண்டும். வர்த்தக நோக்கத்துக்கென வடக்குக்கு வருகை தரும் இந்தியர்கள், சுற்றுலா விசாவிலேயே வருகின்றனர். அவ்வாறான விசாவில் வருபவர்களால் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.
இருப்பினும், இலங்கை வடக்கில் பெண்களைக் கவரக்கூடிய பொருட்களைக் கொண்டு வந்து வர்த்தக நோக்கம் என்ற பெயரில் சுற்றித் திரிகின்றனர். இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலத்தைக் கடந்தும் தங்கியிருக்கின்றனர். இதனால் இவர்கள் தொடர்பில் பாரியதொரு சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் இந்திய புலனாய்வு அதிகாரிகள். வடக்கில் நிலவரத்தைக் கண்டறிவதற்காக வர்த்தகர்கள் என்ற போர்வையில் இங்கு வந்துள்ளனர்.
அதனால், அவ்வாறானவர்கள் ஓமந்தை சோதனைச்சாவடியைக் கடந்து செல்லும் போது மிகக் கவனமாக சோதனையிடப்பட வேண்டும்’ என்று மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா மேலும் கூறினார்.