கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றின் மீது புதிய அணைகளைக் கட்ட திட்டமிட்டிருப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், காவிரி ஆற்றின் மீது, கர்நாடக அரசு மேகேதத்து பகுதியில் புதிய அணைகளைக் கட்டி அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டிருப்பதை உங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
காவிரி ஆற்றின் மீது 3 தடுப்பணைகளைக் கட்டி அதன் மூலம் நீர் மின் சக்தி உற்பத்தி நிலையம் அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது முழுக்க முழுக்க சட்டத்துக்கு விரோதமான செயலாகும். காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் கவனத்துக்கு இந்த திட்டத்தை கர்நாடக அரசு கொண்டு வரவில்லை. மேலும், இந்த திட்டங்கள், தமிழகத்துக்கு கர்நாடக அரசு செய்ய விருக்கும் மிகப்பெரிய தீங்குக்கு இப்போதே எச்சரிக்கை மணி அடிப்பது போல உள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புகள் இன்னும் செயல்வடிவம் பெறுவதற்குள், கர்நாடக அரசு புதிய அணைக்கட்டுகளை கட்டுவதற்கு முடிவு செய்திருப்பது மிகவும் தவறான செயலாகும்.
எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்கி, தமிழகத்துக்கு முன் அறிவிப்பு ஏதும் செய்யாமல், மேற்கொண்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என்று எடுத்துரைக்க வேண்டும்.
மேலும், கர்நாடக அரசு புதிய தடுப்பணைகள் கட்டுவதற்கு, காவிதி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு வரும் வரை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.