|
|
இலங்கை வட மாகாண சபை தேர்தல்: கண்காணிப்பு பணியில் இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமி!
இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை வட மாகாண சபை தேர்தல்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமி தலைமையில் தெற்காசிய தேர்தல்கள் கண்காணிப்பு மையத்தின் சார்பாக 21 கண்காணிப்பாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த குழுவினர் வட மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகளின் முக்கியஸ்தர்களை 15.09.2013 ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இதன் ஒரு அங்கமாகவே இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் கே.விதவராசாவும் கலந்துகொண்டனர். இதன்போது வட மாகாணத்தில் நடைபெறும் தேர்தல் வன்முறைகளையும் தேர்தல் சட்டங்கள் சட்டரீதியற்ற முறையில் மீறப்படுவதையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தேர்தல்கள் கண்காணிப்பாளர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார். இந்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வட மாகாணத்தில் இன்று (16.09.2013) திங்கட்கிழமை முதல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
|