இந்தியாவுடன் நீண்டகால நட்புறவு கொண்ட நாடாக விளங்குகிறது மலேசியா.அதனடிப்படையில் இரு நாட்டுக்குமிடையேயான வர்த்தக ரீதியான தொடர்பை வலுப்படுத்தும் முயற்சியாக 23.09.2013 அன்று தலைநகர் கோலாலம்பூரில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்களுக்கான வர்த்தக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
கோலாலம்பூரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்போடு CIIM எனப்படும் மலேசியாவில் இயங்கும் இந்திய நிருவனங்களின் குழாமும் மலேசிய சிறு மற்றும் நடுத்தர வணிக கழகமும் இணைந்து இக்கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இந்திய–மலேசியா ஆகிய இரு நாட்டு வர்த்தகர்களும்,இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக வாய்ப்புகளையும், வணிக சந்தை சூழல்களை அடையாளம் காண்பதே இக்கலந்துரையாடளின் முக்கிய நோக்கமாகும்.
சுமார் 200 பேர் கலந்து கொண்ட இக்கலந்துரையாடல் அங்கத்தின் போது, இந்திய மலேசிய வர்த்தக தொடர்பை ஏற்படுத்த வல்ல LED மின்னியல் , தளவாடபொருள் வடிவமைப்பு ,ரோபோ,தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் புத்தாக்கம் குறித்தும் அதிலுள்ள வணிக வாய்ப்புகள் குறித்தும் கருத்துகள் பகிரப்பட்டன.
கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டுவரை இந்திய-மலேசியா ஆகிய இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம் 800 கோடி அமெரிக்க டாலரிலிருந்து 1300 கோடி அமெரிக்க டாலருக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வளர்ந்து வரும் பல்வேறு துறைகளில்,இந்திய மற்றும் மலேசியாவைச் சேர்ந்த தொழில்முனைவர்களும்,வர்த்தகர்களூம் எவ்வாறு தங்களின் வாய்ப்புகளை பெருக்கி கொள்ளலாம் என்பது குறித்தும்,எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கும் முக்கிய களமாக இவ்வர்த்தக கருத்தரங்கு விளங்கியது.