அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 68-வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பிரதிநிதிகள் குழுவில் சுமார் 75 பேர் அடங்கியிருந்தனர்.
இவர்களில் ஒருவருக்கான நாள் செலவு 500 அமெரிக்க டொலர்களையும் தாண்டிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. இந்த செலவுகளில் விமானப் பயணம், ஹோட்டல் கட்டணம், வாகனம், தொலைபேசி உட்பட நாள் செலவுகள் அடங்குகின்றனர்.
இலங்கை ஜனாதிபதியுடன் அமெரிக்கா சென்ற குழுவில், அமைச்சர்கள் ஜீ.எல்.பீரிஸ், நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அதாவுத செனவிரட்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜின்வாஸ் குணவர்தன, லொஹான் ரத்வத்த, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, ஜனாதிபதியின் ஆலோசகர்களான தீபா விஜேசிங்க, சேபால, அனோமா லாபீர், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய, பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ், அமைச்சர் அதாவுத செனவிரட்னவின் புதல்வரான நெதர்லாந்துக்கான தூதுவர் புத்தி செனவிரட்ன, உகண்டாவுக்கான தூதுவர் கானா கண்ணன், வர்த்தகரான நோயேன் செல்வநாயகம், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
கடந்த வருடம் இலங்கை அரச பிரதிநிதிகளுக்கான செலவுகள் 25 மில்லியன் ரூபாவாக இருந்துடன் இந்த வருடம் அந்த தொகையானது 250 மில்லியன் ரூபாவுக்கும் மேல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து 75 ஆயிரம் கோடி ரூபாய் கடனைப் பெற்றிருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். அத்தோடு இலங்கையிலுள்ள அரச வங்கிகளிலும் பல மில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி தன்னுடன், அதிகளவான பிரதிநிதிகளை அழைத்துச் செல்வதால் மக்களின் பணம் வீண் விரயம் செய்யப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.