அமெரிக்க அதிபராக ஒபாமா 2–வது தடவை பதவி ஏற்றவுடன் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தார். அதற்கு ‘ஒபாமா கேர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஜனநாயக கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு பெருகிவிடும்.
இதன் மூலம் அடுத்த தேர்தலிலும் அக்கட்சியே ஆட்சியை பிடிக்கும். வாய்ப்பு உருவாகும். எனவே, எதிர்க்கட்சியான குடியரசு கட்சி தொடக்கத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்தது. மேலும் இத்திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்குவதால் மற்ற துறைகளுக்கு போதிய பணம் வழங்க முடியாது என்றும் கூறி வந்தது.
எனவே, மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதை காரணம் காட்டி வருகிற 2014–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஆதரவு தராமல் தடுத்துவிட்டது . இதனால் அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடிய வில்லை.
இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது உள்ளிட்ட அரசு பணிகள் முழுவதும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. ஆகவே அதை சமாளிக்க முதல் கட்டமாக அமெரிக்காவில் சில அரசு நிறுவனங்களை மூடியது. இதனால் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
அதை தொடர்ந்து வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் அதிபர் ஒபாமா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்,
அப்போது அவர் கூறியதாவது:– அரசு அலுவலகங்கள் தொடர்ந்து மூடப்பட்டால் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்படும். இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படும், பல வர்த்தகங்களும் நசிவு ஏற்படும்.
எனவே பொருளாதார பாதிப்பை தடுக்க பட்ஜெட் நிறைவேற ஒத்துழைப்பு தாருங்கள். இனியும் காலதாமதம் செய்யாதீர்கள். அமெரிக்கா மீதான நற்பெயருக்கு களங்கம் இழைக்க யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன்.
நமது பொருளாதாரம் பாதிக்க யாரும் காரணமாக இருக்க கூடாது. லட்சக் கணக்கான ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படக் கூடாது.
கடந்த 1996–ம் ஆண்டிலும் குடியரசு கட்சியினரால் தான் இது போன்று அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன அதனால் நமது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அது போன்றும் இப்போது தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்று விடும்.
ஆகவே ஜனநாயக கட்சியினரும், குடியரசு கட்சியினரும் இணைந்து பணியாற்றி நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும். எனவே பாராளுமன்றத்தில் பட்ஜெட் நிறைவேற குடியரசு கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும் அதற்காக குடியரசு கட்சியினருடன், பேச தயாராக இருக்கிறேன். இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.