தமிழக அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி பள்ளி கல்வித்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.
அவருக்கு பதில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா கவர்னர் ரோசய்யாவுக்கு பரிந்துரை செய்து இருந்தார்.
புதிய அமைச்சர் பதவி ஏற்பு நிகழ்ச்சி கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று (01.11.2013) பகல் 12.30 மணி அளவில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா பகல் 12.25 மணிக்கு கவர்னர் மாளிகை வந்தார். அவரை அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.
விழாவுக்கு வந்த கவர்னர் ரோசய்யாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் பதவி ஏற்பு நிகழ்ச்சி கவர்னர் மாளிகை மண்டபத்தில் நடந்தது. ஜெயலலிதா முன்னிலையில் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ரோசையா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவி ஏற்றதும் அவர் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வாழ்த்துப் பெற்றார்.
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு மக்கள் நல்வாழ்வு, மருத்துவக்கல்வி, மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.