ஏற்காடு இடைத்தேர்தல் தேதி கடந்த அக்டோபர் மாதம் 4–ந்தேதி மாலை அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் மற்றும் புதிய திட்டங்களை தொடங்குவது, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவை வழங்கும் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறையினர் யாரும் ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளிடம் தொடர்பு வைக்க கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கடுமையாக எச்சரித்து இருந்தது.
இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியை, ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி ஜெயராமன் சந்தித்து பேசியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் மகரபூஷணம் விசாரித்து, அமைச்சரை வீட்டில் சந்தித்து பேசி சென்ற ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நேர்மையான முறையில் தேர்தல் நடத்திட முழுமையாக செயல்பட்டு வருகிறோம் என்று கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்தார்.