இலங்கையில் நடைபெற்ற 23-வது காமன்வெல்த் மாநாட்டுக்கு1400 கோடி செலவு!

thissa-attanayake1

இலங்கையில் நடைபெற்ற 23வது காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் 54 உறுப்பு நாடுகளில் 21 நாடுகள் மட்டுமே கலந்து கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மாநாட்டுக்கு 14 பில்லியன் ரூபாவை (1400 கோடி ரூபா) அரசாங்கம் செலவு செய்துள்ளது. 21 நாடுகளே மாநாட்டில் கலந்து கொண்டனர். இதனடிப்படையில் பார்த்தால் ஒரு தலைவருக்கு தலா 70 கோடி ரூபாவுக்கும் மேலான பணத்தை அரசாங்கம் செலவிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசர் சார்லஸின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெட்டப்பட்ட கேக்கின் விலை என்ன என்பதை அறிந்து கொள்ளும் தேவை மக்களுக்கு உள்ளது.

நான் முன்வைத்த இந்த புள்ளிவிபரங்கள் தவறாக இருந்தால் சரியான புள்ளி விபரங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.