பத்திரிகையாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு !

tehelka- editortehelka-weekly

இந்தியாவில் பிரபல புலனாய்வு பத்திரிக்கை ‘தேஹல்கா’வின் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது பெண் பத்திரிகையாளர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதை அடுத்து இவ்விவகாரத்தில் தேசிய பெண்கள் ஆணைக்குழு தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.

புலனாய்வு பத்திரிக்கையான ‘தேஹல்கா’வின் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டதாக அவருடன் இணைந்து பணிபுரியும் பெண் பத்திரிகையாளர் ஒருவர், அந்நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரிக்கு எழுதியுள்ள மின்னஞ்சலில் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தருண் தேஜ்பால் தனது பதவியில் இருந்து ஆறு மாத காலத்துக்கு தற்காலிகமாக விலகுவதாக நிர்வாக ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இவ்விகாரம் குறித்து மகளிர் அமைப்புகளும், சமுக ஆர்வலர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து இவ்விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட தேசிய பெண்கள் ஆணைக்குழு தானாகவே முன்வந்து இதில் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் இந்த குற்றச்செயல் இந்தியாவின் சுற்றுலாத்தலமாக திகழும் கோவாவில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுவதால், கோவாவின் மாநில முதல்வர் மனோகர் பரிகரும் தானாகவே முன்வந்து இந்த குற்றச்செயல் குறித்த விசாரணையை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல்வேறு அமைப்புகளும் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், குற்றம் சாட்டப்பட்டுள்ள தருண் தேஜ்பால் தானாகவே முன்வந்து தனது குற்றத்திற்கான தண்டனையை தீர்மானிப்பது போல் நடந்து கொள்வது ஏற்கத்தக்கதல்ல என்று கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.