இலங்கை சிறைகளில் உள்ள 80 தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

jayalalithapr231113_641 copyபிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (23.11.2013) ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

இலங்கை கடற்படையினரால் கடந்த 21–ந்தேதி அப்பாவி தமிழக மீனவர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டிருப்பதை மிகுந்த மன வேதனையுடன் மீண்டும் ஒரு தடவை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன். ‘‘உலக மீனவர் தினம்’’. அன்று இந்த சட்ட விரோத சம்பவம் நடந்திருப்பது கவலை அளிக்கிறது.

இந்திய அரசு இந்த விஷயத்தில் மவுனமாக, உணர்ச்சியற்ற நிலையில் இருப்பதால்தான் மீண்டும், மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நடக்கிறது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் அமைதியாக வாழ்வாதாரத்தில் ஈடுபடும் போது சிங்களர்களால் கொடூரமாக தாக்கப்படுவது அதிகரித்தப்படி உள்ளது.

இந்திய அரசு இதையெல்லாம் பார்த்து மவுனமாக இருப்பதால்தான் சிங்கள கடற்படையினர் தைரியம் பெற்று மீண்டும், மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை சட்ட விரோதமான முறையில் பிடித்துச் செல்கின்றனர்.

பாக் ஜலசந்தியில் சமீபத்தில் 5 படகுகளில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 20 அப்பாவி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கி பிடித்து சென்று விட்டதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அந்த 20 அப்பாவி ஏழை மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப் பட்டினத்தை சேர்ந்தவர்கள்.

அவர்கள் கடந்த 20–ந்தேதி இரவு ஐஎன்டி–டிஎன்– 08–எம்எம்–106, ஐஎன்டி–டிஎன்–08–எம்எம்– 125, ஐஎன்டி–டிஎன்–08– எம்எம்–245, ஐஎன்டி–டிஎன்– 08–எம்எம்–297, ஐஎன்டி– டிஎன்–04–எம்எம்–173 ஆகிய 5 படகுகளில் சென்று தாங்கள் வழக்கமாக மீன் பிடிக்கும் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். 21–ந்தேதி அவர்களை இலங்கை கடற்படையினர் சட்ட விரோதமாக கைது செய்து கடத்திச் சென்று விட்டனர்.

உலகம் முழுவதும் உள்ள மீனவ சமுதாயத்தினர், உலக மீனவர்தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் அப்பாவி தமிழக மீனவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் வேதனை அடையும் வகையில் இத்தகைய செயலை இலங்கை கடற்படை செய்துள்ளது.

இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி விட்டது. என்றாலும் இந்திய அரசு இதுவரை தனது கடும் எதிர்ப்பை தெரிவிக்க வில்லை. நடுக்கடலில் நடக்கும் தாக்குதல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர இந்திய அரசு தூதரக அளவிலும் பேச்சு நடத்த வில்லை.

பல்லாயிரக்கணக்கான நமது மீனவர்களின் வாழ் வாதாரத்தை சீர் குலைத்து வரும் இத்தகைய சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் இந்திய அரசு தொடர்ந்து கண்டு கொள்ளாமல் இருப்பதால், தமிழக மீனவர்கள், தங்கள் சொந்த அரசே, தங்களை கைவிட்டு விட்டு வேடிக்கை பார்ப்பதாக கடும் மனவேதனையில் உள்ளனர்.

கடந்த 21–ந்தேதி கடத்தி சிறை வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்கள் தவிர, ஏற்கனவே 60 தமிழக மீனவர்கள் கடத்தி செல்லப்பட்டு இலங்கையில் உள்ள சிறைகளில் வாடி வருகிறார்கள் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அவர்களை இன்னமும் இலங்கை அரசு விடுதலை செய்யவில்லை.

நம்முடைய மீனவர்களின் 42 மீன்பிடி படகுகளை இலங்கை அரசு திருப்பித்தராமல் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இதனால் நமது ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு கணிசமான அளவுக்கு பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்திய அரசும் நீங்களும் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, தூதரக அளவில் பேச்சு வார்த்தை நடத்தி இலங்கை சிறைகளில் உள்ள 80 தமிழக மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு நமது மீனவர்களின் 47 மீன்பிடி படகுகளையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.