தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும் கருப்பின தலைவருமான நெல்சன் மண்டேலா புற்று நோயின் காரணமாக பல வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
டாக்டர்கள் சிகிச்சை பலனளிக்காததால் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். நேற்று அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இந்திய நேரப்படி இன்று (06.12.2013) காலை 7 மணிக்கு மரணம் அடைந்தார். 95 வயதான மண்டேலாவின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று (06.12.2013) இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
பின்னர் திங்கட்கிழமை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் 5 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இன்று நடந்த சிறப்பு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தென்னாப்ரிக்காவிலும், உலகெங்கும் பல கோடிக்கணக்கானோர், நெல்சன் மண்டேலாவின் மறைவு செய்தி கேட்டு, துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
தென்னாப்ரிக்காவில், ஜோஹனிஸ்பர்கில் அவரது இல்லத்துக்கு வெளியே ஏராளமான மக்கள் மெழுகுவர்த்திகளையும், மலர்களையும் வைத்துப் பிரார்த்தனைகளை இரவு முழுவதும் நடத்தினர்.
அவரது வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் வேறு பலர், நிறவெறிக்கெதிரான போராட்டத்திலிருந்து பாடல்களைப் பாடி, நடனமாடினர். சிலர் தங்கள் சிறு குழந்தைகளுடன் வந்திருந்ததைக் காண முடிந்தது. தென்னாப்ரிக்காவில் எல்லாக் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கின்றன.
மண்டேலாவின் இறுதிச் சடங்கு இம்மாதம் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நடக்கவுள்ளதாக தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா அறிவித்துள்ளார். 10 நாட்களுக்கு கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும்.
துக்க அனுஷ்டிப்புக் காலம் தென்னாப்ரிக்காவில் துவங்கிய நிலையில், தென்னாப்ரிக்காவின் அனைத்துப் பொது, அரசு கட்டிடங்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தென்னாப்ரிக்கத் தூதரகங்கள் அனைத்திலும், அஞ்சலிக் குறிப்புகளை மக்களும் பிரமுகர்களும் எழுத உதவும் வகையில், அஞ்சலிப் புத்தகங்கள் வைக்கப்படுகின்றன.
ஜோஹனஸ்பர்கின் புறநகர்ப்பகுதியில் உள்ள எப்.என்.பி அரங்கத்தில், தேசிய துக்கப் பிரார்த்தனை நிகழ்வு ஒன்று நடத்தப்படவிருக்கிறது. அதன் பின்னர், பிரிட்டோரியாவில் மூன்று நாட்கள் நெல்சன் மண்டேலாவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். நெல்சன் மண்டேலாவின் உடல் கிழக்கு கேப் பகுதியில் அவர் வளர்ந்த குனு கிராமத்தில் அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.
நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கைக் குறிப்பு:
1918 – கிழக்கு கேப்பில் பிறந்தார்
1943- ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்
1956- தேசத் துரோகக் குற்றச்சாட்டு அவருக்கு எதிராகப் பதியப்பட்டது, ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் கைவிடப்படுகின்றன
1962-கலவரத்தைத் தூண்டியது, பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டைவிட்டு வெளியேறியது ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை
1964- நாசவேலை குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறார்.
1990- சிறையிலிருந்து விடுதலை
1993– அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது
1994- தென்னாப்ரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
1999- தென்னாப்ரிக்காவின் அதிபர் பதவியிலிருந்து விலகுகிறார்.
2001- ப்ரொஸ்டேட் புற்று நோய் பீடிக்கிறது.
2004- பொது வாழ்விலிருந்து விலகுகிறார்.
2005- தனது மகன் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் தொடர்பான உடல்நலக்குறைவால் இறந்ததாக அறிவிக்கிறார்.