தமிழக அமைச்சரவை இன்று (09.12.2013) மாற்றம் செய்யப்பட்டது. விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.வி.ராமலிங்கம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
அமைச்சர்கள் ரமணா, எம்.சி.சம்பத், தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டு உள்ளன. அமைச்சர் ரமணாவிடம் இருந்த வணிக வரி மற்றும் பத்திரப் பதிவு துறை எம்.சி.சம்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
எம்.சி.சம்பத்திடம் இருந்த சுற்றுச்சூழல் துறை, தோப்பு வெங்கடாச்சலத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தோப்பு வெங்கடாசலத்திடம் இருந்த வருவாய்த்துறை ரமணாவிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா பரிந்துரையை ஏற்று கவர்னர் ரோசையா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதவி ஏற்பு விழா 11.12.2013 புதன்கிழமை காலை 9.45 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் கவர்னர் ரோசையா, புதிய அமைச்சர் உதயகுமாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.