தே,மு,தி.க., கட்சியின் எதிர்க் கட்சி துணை தலைவரும், அக்கட்சியின் எம்.எல்.ஏ.,வுமான பண்ருட்டி ராமச்சந்திரன், தனது எம்.எல்.ஏ., பதவியை இன்று (10.12.2013) ராஜினாமா செய்தார்.
இது குறித்து அவர் சபாநாயகர் தனபாலுக்கு எழுதி உள்ள கடிதத்தில், வயது மூப்பு காரணமாகவும், உடல் நிலை சரியில்லாத காரணத்தாலும் தனது எம்.எல்,ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தன்னை விடுவித்துகொள்வதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பு:
உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஆகவே தே.மு.தி.க.வின் கட்சிப் பொறுப்புக்களிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இன்று முதல் 10/12/2013 விலகிக் கொள்கிறேன்.
தாயினும் மேலான அன்பு காட்டி, என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க ஆலந்தூர் தொகுதி மக்களின் காலத்தே செய்த இந்த உதவியை எனது வாழ்நாள் முழுதும் நெஞ்சில் நீங்காது நிலை நிறுத்துவதோடு அவர்களுக்கு எனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
அன்புடன்
பி.இராமச்சந்திரன்