தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரின் பதவியை மாற்றி தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:–
தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் இயக்குனராகவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும் இருந்த கே.ராஜாராமன் வணிக வரித்துறை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வணிக வரித்துறை கமிஷனராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.மணிவாசன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உயர்கல்வித்துறை செயலராக இருந்த அபூர்வா வர்மா, புதிய உள்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறைகளும் அவர் வசம் இருக்கும்.
இதுவரை உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை செயலராக இருந்த டாக்டர் நிரஞ்சன் மார்டி இனி பொருளியல் மற்றும் புள்ளியல்துறை கமிஷனர் மற்றும் முதன்மை செயலர் பொறுப்பை வகிப்பார்.
புள்ளியயல் துறை கமிஷனராக இருக்கும் டாக்டர் இறையன்பு அண்ணா நிர்வாக கழகம் இயக்குனர் மற்றும் முதன்மை செயலாளர் பொறுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இயக்குனர் பொறுப்பை இதுவரை அனிதா பிரவீன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
தமிழக சுகாதார முறை திட்ட இயக்குனராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பங்கஜ்குமார் பன்சால் சென்னை மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வு முதன்மை செயலாளராக இருந்த வி.கே.ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய உறுப்பினர் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை இதுவரை ராஜா ராமன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறை முதன்மை செயலாளராக இருந்த என்.எஸ்.பழனியப்பன், உயர்கல்வித்துறையின் முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.