ஓட்டுநரின் அலட்சியம், தாயின் கவனக்குறைவு, பொதுமக்களின் சுயநலம் டிராக்டரில் சிக்கி குழந்தை பலி: வேலூரில் நடந்த விபரீதம்!

vellur newsவேலூர் அல்லாபுரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் பழவியாபாரி. இவரது மனைவி காயத்திரி. இவர்களது மகன் தமிழரசன் (வயது 21/2) மிகவும் செல்லமாக வளர்த்து வந்தனர்.

இன்று (25.12.2013) கே.கே.நகர் பகுதியில் மாநகராட்சி டிராக்டர் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. காயத்திரி குடங்களை எடுத்து கொண்டு தண்ணீர் பிடிக்க சென்றார். அவரது பின்னால் சிறுவன் தமிழரசன் மெதுவாக நடந்து சென்றான். தெருவில் உள்ள பெண்கள் வழக்கம் போல அவசர அவசரமாக தண்ணீர் பிடித்தனர்.

அங்கு வந்த தமிழரசன் தண்ணீர் டேங்கருக்கு அடியில் நின்று கொண்டு விளையாடினான். டேங்கரில் உள்ள தண்ணீர் காலியானதும். மாநகராட்சி டிரைவர் செல்வம் அவசரமாக டிராக்டரில் ஏறி அமர்ந்தார். ஆனால்,டேங்கருக்கு அடியில் நின்ற சிறுவனை யாருமே கவனிக்கவில்லை.

டிரைவர் செல்வம் டிராக்டரை வேகமாக எடுத்தார். அப்போது டேங்கருக்கு அடியில் நின்ற தமிழரசன் மீது டயர் ஏறி இறங்கியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட போது தான் அனைவரும் திடுக்கிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதனைகண்ட அவனது தாய், உறவினர்கள் அலறி, அழுது துடித்தது பார்ப்பவர்கள் அனைவரையும் பதற வைத்தது.

சம்பவத்தை கண்ட டிராக்டர் டிரைவர் செல்வம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பத்தால் அந்த பகுதியில் சோகம் நிலவுகிறது.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஓட்டுநரின் அலட்சியம், தாயின் கவனக்குறைவு, பொதுமக்களின் சுயநலம் அநியாயமாய் ஒரு குழந்தையின் உயிரை காவு வாங்கிவிட்டது.