ஜூனியர் விகடன் செய்தியாளர் மகா. தமிழ் பிரபாகரன் இலங்கையில் கைது : நாடு கடத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் திட்டம்! கைதுக்கு காரணம் என்ன?

MAHA TAMIL PRABAKARANF

MAHA TAMIL PRABAKARAN.jpgf1

இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு உள்ள ஜூனியர் விகடன்” செய்தியாளர் மகா. தமிழ் பிரபாகரன் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படலாம் என தெரிகிறது.

சுற்றுலா நுழைவு உரிமை பெற்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதி பிள்ளை ஆகியோருடன், மகா. தமிழ் பிரபாகரன் பொன்னாவிழி என்ற கிராமத்துக்குச் சென்றார்.

அங்கிருந்து வலைப்பாடு கிராமத்துக்குச் சென்று, புனித அந்தோணியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை அவர்களோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, 25.12.2013 பகல் 1.30 மணி அளவில், இலங்கை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர். மூவரையும் கைது செய்த இராணுவத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனையும், பசுபதி பிள்ளை ஆகிய இருவரையும் அன்று மாலை விடுவித்தனர். மகா.தமிழ் பிரபாகனை மட்டும் தொடர்ந்து சிறை வைத்து உள்ளனர்.

வீசா விதிமுறைகளை மீறியமை, வடக்கில் இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களை அனுமதியின்றி புகைப்படம்பிடித்தமை காரணமாகதான் இவர் நாவற்குழி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார் என்று இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணை திணைக்கள அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள “ஜூனியர் விகடன்” செய்தியாளர் மகா. தமிழ் பிரபாகரன் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு பின்னர் இலங்கை நாட்டில் இருந்து வெளியேற்றுவதற்காக குடிவரவு,குடியகல்வு திணைக்களத்திடம் மகா.தமிழ் பிரபாகரன் ஒப்படைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் பத்திரிகையார் மட்டுமல்ல!  இவர் விடுதலைபுலிகளின் தீவிர ஆதரவாளர், இவருக்கு இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளிடம் நெருங்கிய தொடர்பும் இருக்கிறது,அதனால் தான் இவரை இலங்கை இராணுவம் கைது செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது.

Pulithadam thedi.jpg1Pulithadam thediஇவர் இலங்கைக்கு செல்வது இது முதல்முறை அல்ல! இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்திற்கு பிறகு இலங்கைக்கு நேரடியாக சென்று புலித்தடம்தேடி… என்ற தலைப்பில் “ஜூனியர் விகடன்”இதழில் கட்டுரை எழுதிப் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

மறுபடியும் அப்படி ஒரு பயணக் கட்டுரையை எழுதும் நோக்கத்தில் தான் அதற்கான தடயங்களையும், ஆதாரங்களையும் திரட்டுவதற்கு சென்று தற்போது இலங்கை இராணுவத்திடம் சிக்கிக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஆர்வம் இருக்கும் அளவிற்கு அவருக்கு சட்ட நுணுக்கம் தெரிய வில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நமது “உள்ளாட்சித் தகவல்” நிருபர்கள் குழு   ஆய்வு செய்துள்ளது. மகா. தமிழ்பிரபாகரன்-னின் கீழ்க்காணும் முந்தைய நேர்காணலும், அவரது படைப்புகளுமே இதற்கு சான்றாக திகழ்கிறது.

யார் இந்த மகா. தமிழ்பிரபாகரன்?

இளம் பத்திரிகையாளர், கவிஞர், ஆவணப்பட இயக்குநர் என பன்முக ஊடகங்களில் தனித்த  ஆளுமையுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் மகா.தமிழ்ப் பிரபாகரன். சமகாலத் தமிழ் ஊடக அரசியலில் உறுதியாகவும், உரத்தும், இடையறாது ஒலிக்கும் குரல் இவருடையது.

“நானும் வாடியப்பயிர்” ஒரு கவிதைத் தொகுப்பும், “யுத்தம் செய்வோம்” மரணத் தண்டனைக்கு எதிரான ஒரு பாடல் ஒலி குறுந்தகடும்  இதுவரை வெளியாகியுள்ளன.

MAHA TAMIL PRABAKARANவிகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தலைசிறந்த நிருபர்-புகைப்படவியலாளருக்கான விருதும்பெற்றவர்.  ஜுனியர் விகடனில் இவரின் “புலித்தடம் தேடி..” இவரை தமிழுலகிற்கு பரவலாக அறிமுகப்படுத்தியது. ஈழத்தின் பல மாகாணங்களுக்குச் சென்று நேரடியான பல தகவல்கள் தந்தவர் .

படித்தது வளர்ந்தது எல்லாம் தர்மபுரி – சேலம் – நாமக்கலிலும் தான். அப்பா பெரியாரிய சிந்தனைக் கொண்டவர். அதனாலேயே இப்பெயரும் எனக்கு வைக்கப்பட்டது. நான் எட்டாவது படிக்கும் போது அப்பா இறந்து விட்டார், பின் எல்லாமும் அம்மா மட்டும் தான். கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கி சென்ற வாழ்க்கை அப்பாவின் இறப்புக்கு பின் மீண்டும் கிராமத்துக்கே கூட்டி வந்தது. கல்லூரியின் போது மீண்டும் சேலம் நகரம். கல்லூரி நாட்களில் நான் படிப்புக்கு அப்பாற்பட்டு செய்த எழுத்து பணிகளுக்கும் மாணவ நிருபராக விகடனில் சேர்ந்ததற்கும், பெரிதும் உறுதுணையாக இருந்தது என் அம்மா. இன்று நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணமும் அம்மா தான்.

 பொறியியல் துறை மாணவரான நீங்கள் எதற்காக கவிஞராகவும் எழுத்தாளராகவும் செயல்படத் தொடங்கினீர்கள்?

விரும்பி எடுத்த படிப்பு தான் என்றாலும் நான் கல்லூரி படிப்பை தொடங்கிய செப்-2008 காலம் ஈழப் போர் உக்கிரத்தை தொட ஆரம்பித்த நேரம். மே 2009 தமிழர்களின் பின்னடைவை மனம் ஏற்றக்கொள்ளாத நேரம். தொடர்ச்சியாக அது வேறு வேறு அரசியலுக்குள்ளும் படிப்பினைக்குள்ளும் என்னை கொண்டு சென்றது. இதன் தொடர்ச்சியே என்னை மேலும் மேலும் எழுதவும் வைத்தது.

இப்போது தமிழகம் அறிந்த பிரபல நிருபர்களில் ஒருவர். உங்களிடத்தில்  இந்த புகழ் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது?

பிரபல நிருபர் எல்லாம் பெரிய வார்த்தை, கவனத்தை ஈர்த்த நிருபர் அவ்வளவே. யாரும் எதிர்பாராத நேரத்தில்  ‘புலித்தடம் தேடி’ தொடர் வெளிவந்ததும் , இதற்கான விளம்பரம் வெளிவரும் நேரத்தில் ‘ஈழ விசயத்தில் மீண்டும் மற்றோர் உசுப்பேத்தும் தொடர் என்றும், விகடனிலிருந்து யாரோ ஒருவர் இன்பச் சுற்றுலா போய் வந்துள்ளார் என்றும்’ எனக்கு தெரிந்தவர்களாலேயே விமர்சனங்கள் எழுதப்பட்டன. ஆனால் அவை யாவையும் இத்தொடரின் செய்திகள் தகர்த்தது, அவர்கள் பின் வாயடைத்து போனதையும் நான் அறிந்தேன். ‘புலித்தடம் தேடி…’ எனக்கான அடுத்த தேடலையும், என் வாழ்வை பத்திரிகை துறையிலேயேயும் தொடரச் செய்துள்ளது.

உங்களின் ஆளுமையில் தாக்கம் செலுத்தியவர்கள் பற்றி கூறுங்கள்?

என் ஆளுமையில் தாக்கம் செலுத்தியதில் பெருமளவு பங்கு கொண்டவர் என் அப்பா. அவர் இருந்த காலத்தில்  எனக்கு ஏற்பட்ட அறிவு ரீதியான தாக்கங்களை விட ‘அவர் இறப்பில் ஏற்பட்ட மரணத் தாக்கமே’ என் எழுத்துக்களை ஆட்கொண்டுள்ளது. ‘மனிதத்தின் மீதான முதல் தாக்கத்தையும் வேட்கையும்’ எழச் செய்தது அப்பா தான். என் பள்ளி காலத்தில் ஏற்பட்ட இந்த மரணத் தாக்கமே ஒவ்வொரு மனித உயிரின் உன்னதத்தையும் எனக்கு அறிய செய்தது.

பல ஆண்டுகள் கழித்து என் அப்பாவை போலவே ஓர் மனிதரை நேர்மைமிக்கவரை சந்தித்தேன் என்று சொன்னால் , அது ‘ப.திருமாவேலன்’. அவரே எனக்கு பத்திரிகை துறையின் மீதான தாக்கத்தையும் தாகத்தையும் எழச்செய்தவர். இவர்கள் இருவரும் தான் எதார்தத்தில் என் ஆளுமையில் தாக்கம் செலுத்தியவர்கள்.

அதை போக ‘மனிதத்தை நேசிக்க தெரிந்தவர்கள்’ யாவருமே என் ஆளுமையில் தாக்கம் செலுத்தியவர்கள்தான்.

தமிழில் இன்றைய எழுத்துச் சூழல் எப்படி இருக்கிறது?

தமிழில் இன்றைய எழுத்துச் சூழல் விகிதாச்சார ரீதியாக பார்த்தால் குறைந்து கொண்டே தான் வருகிறது. 40 வயதுக்கு மிகுந்தவர்களே  தமிழின் எழுத்துச் சூழலை பெருமளவு ஆக்கிரமித்துள்ளனர். புதிதாக வருபவர்கள் இவர்களிலிருந்து வேறுபடுத்தப்பட்டும் தனிமைப்படுத்தப்பட்டுமே பார்க்கப் படுகின்றனர். புதிதாக வரும் இளையோர்களை தட்டிக்கொடுத்து போகும் போக்கு தமிழ் எழுத்துச் சூழலில் அருகி வருகிறது  என்று சொல்லும் நிலையே உள்ளது. இதற்கு உதாரணம் காவல்கோட்டம் எழுதிய  வெங்கடேசன் அவர்களையும் தூப்புகாரி எழுதிய மலர்வதி அவர்களையும் மூத்த எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்பவரகள்  ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர், தள்ளிவைத்து பார்க்கப் படுகின்றனர். மூத்த எழுத்தாளர்கள் இவர்களை விமர்சிப்பது தவறல்ல, ஆனால் எழுத்துச் சூழலலிருந்து இவர்களை ஒதுக்குவதற்காக விமர்சிப்பது தவறு. இது எழுத்துச் சூழலுக்கு வரும் இளைஞர்களுக்கு ஆரோக்கியமற்ற சூழலை ஏற்படுத்தும். ஒருவரின் எழுத்தையும் அனுபவத்தையும் வயதை வைத்து பார்க்க கூடாது ,’செயலை வைத்து பார்க்க வேண்டும்’. அப்படியான நிலைமை தமிழ் சூழலில் இல்லை, வயதை வைத்தே தகுதி உட்பட அனைத்தும் நிர்ணயிக்கப் படுகிறது.

ஒரு பயணியாக தமிழீழம் இன்று அடைந்திருக்கும் மாற்றம் குறித்து உங்களுக்குச் ஏதாவது சொல்ல இருக்கிறதா?

இன்று தமிழீழம் அடைந்துள்ள மாற்றம் ராணுவ ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் தான். இப்போது ஈழ அரசியல் என்பது குறிப்பிட்ட பகுதியின் அரசியல் என்பதிலிருந்து சர்வதேச அரசியலாக மாறி இருக்கிறது. இங்கு நாம் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கைக்கு செலுத்தும் முக்கியத்துவத்தில் பத்து வீதம் கூட அங்கு வாழும் மக்கள் மீது செலுத்தவில்லை. ‘அதை இனியாவது செய்ய வேண்டும்’ ஓர் பயணியாக சொல்ல விரும்புவது.

அங்கு உள்ள தமிழர்களின் நிலைப்பற்றிச் சொல்லுங்கள்?

சொல்ல என்ன இருக்கிறது, ‘நிர்கதிகள்’ !

நீங்கள் எழுதிய புலித்தடம் தேடி… பகுதியில் உங்கள் மனதை மிகவும் பாதித்த பகுதி எது?

இந்த முழுத்தொடரும் என் மனதில் ஏற்பட்ட பாதிப்பினால்,அம்மக்களின் வலியை கண்டதால் எழுதப்பட்டது என்றாலும் ‘என் ஆழ் மனதை தெய்த்தது புது மாத்தளன் தான். இன்று வரை கடலையும் மணல் திட்டுகளையும் வெகுநேரம் பார்த்தப்படி இருக்க முடிவதில்லை, இவை என் கண்களை தானாக கலங்க செய்கிறது. மீண்டும் அந்த மண்ணிற்கு என்று செல்வேன் என்ற ஏக்கம் தான் என் மனமெங்கும் நிரம்பி கிடக்கிறது. மீண்டும் அம்மண்ணிற்கு செல்லும் போது அது ‘விடுதலை தமிழீழமாக இருக்க வேண்டும்’ என்பதே ஏக்கத்தில் உள்ள நோக்கம்.

விடுபட்ட நிகழ்வுகள் அல்லது இடங்கள் இன்னமும் அந்த தேசத்தில் சேகரிக்க வேண்டிய செய்திகள் உள்ளதா?

நான் புலித்தடம் தேடி தொடரில் இன்றைய இலங்கையை பற்றி எழுதியது சிறு எச்சங்களே. ஒவ்வொரு ஈழவனின் நெஞ்சிலும் ஆயிரக்கணக்கிலான வலிகள் மிகுந்த சம்பவங்கள் இருக்கிறது. இன்னும் செல்ல வேண்டிய இடங்கள், எழுத வேண்டிய நிகழ்வுகள், சேகரிக்க வேண்டிய செய்திகள் எக்கச்சக்கமாய் உள்ளது. அதை நோக்கிய தேடல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்…

நன்றி : திசைக்காட்டி

 

ஒரு பிடி மண்

–  மகா.தமிழ்ப் பிரபாகரன்

குண்டடிப்பட்ட கரங்களுடன்

குருதி கறையுடன்

ஒரு பிடி மண்!

தப்பி வந்த நடுநிசியில்
யாழ்ப்பாண மீன்பிடி தோணியில்
ஏறியவுடன் சட்டைப் பையில்
நிரப்பிக்கொண்டேன் தாய்மண்ணை.

சமுத்திரமே ஓய்ந்தாற் போல
அலைகள் சலனமின்றி
குண்டுகளின் ஓலமே
காதில் விழ
விடியற்பொழுதில் சிற்றோடம் கரைத்தட்டி
தமிழ்நாட்டில் சாய்ந்தது
அகதியெனும் பெயர் தாங்கி
தடுமாறி எழுந்தேன்…
குருதி வாடையே மீதமிருந்தது
சுமந்து வந்த
ஒரு பிடி தாய் மண்ணையும்
பிடுங்கிக் கொண்டது, அலை.

நன்றி : யூத்புல் விகடன்  

எரிதழல் ஏந்தி வா! 
துரோகத்தின் ஊடே
முறையற்ற பகைமை
அதிகார ஆதிக்க
வர்க வதத்தினை
கொழுத்திட
எரிதழல் ஏந்தி வா!
குருதி துடித்தெழுந்து வா !
அச்சம்தனை தீயலிட்டு வா !!
செந்நெருப்பு மூட்டி வா !!!

திருமேனிதனில் தணல்
மூண்டு தானே
எரிக்கொன்டு
களமாடிடு புலியாய்…
அறமற்று எம்வீடேறி
கொன்றிட்ட வந்தேறிதமை
செந்தழல் மூட்டும்
நெருப்பிற்கு இரையாக்கு…
செந்தமிழ் முழங்க
வீணரவனை பொடியாக்கு…

யாதொரு படை
பின்னுக்கு போகினும் …
தீதொரு
இடுக்கண் நேரினும்
உடலுக்கு தாமே
கொள்ளியிட்டுக்கொண்டு
தமிழுயிர் தின்றவனை
வென்று வாழும்
செத்தும்,வெல்லும்!!

புலியாய் நீ
எரிதழல் ஏந்தி வா!
சிங்களவன் கொட்டத்தினை
அடக்கி வா!
வேறோடு அறுத்து வா!!
ஏந்திய செந்தீ
புலிவீரம் படிக்கும் !!
தமிழ்மானம் சிறக்கும் !!!

தேய்வுராத தேசத்தின் குரல் !

பேச்சாயிதமேந்தி  தேய்வுராத
மூத்த குரல்…
பாலனே !
நீ
மடை உடைந்த
ஈழ எல்லைக்கோட்டை
உலகுணர
எடுத்துக்காட்டிவன்…

தடை பதிந்த
விடுதலை போராட்டத்தை
தலைநிமிர உரையாற்றிவன்…

நஞ்சு சுமந்த
மாவீரனை புலம்பெயர்ந்தவரிடமும்
புவியினரிடமும்
உயர்த்தி நிறுத்திவன்…

தாயகத்தை விலைப்பேசியவனை
அழல் நிறையும்
பேச்சால் அடிக்கியாண்டவன்…

வலியுணர்ந்த காயத்தை
சபைவழியேற்றி புரட்சியாக்கிவன்…

குருதியாற்றில்  நனைந்த
தேசத்தை உறுதியோடு
பின்பற்றியவன்…

நிலைக்குலைந்த மக்கள்
வாழ்வு நிலையாகிட
தலைவனோடு நிலைத்திருந்தவன்…

பன்னாட்டு அவையங்களில்
புலிகளின் தாகம்
தமிழீழ தாயகமென்று
மார்தட்டி சொன்னவன் …

பிரபாகரன் சகாப்தத்தில்
வலிமையுடைய மன்னவனாய்
வாழ்ந்து
தேசத்தின் குரலாய்
தகப்பனாய்  மூத்தவராய்
வாழ்கிறாய் பாலனே !!

முள்ளிவாய்க்கால் மூட்டிய  பெருந்தீ!

நரிகள் குடியேறிய
புலிகள் தேசம்!
பண்டார வன்னியன் ஆண்ட
வேங்கைகள் தேசம்!
சோழன் வலம் வந்த
ஈழதேசம்!
இது நரிகள்  குடியேறிய
புலிகள் தேசம்…
புத்த தேசம்
புத்தி இழந்த வஞ்சக சிங்களம்!
நயவஞ்சக இந்தியம்!!

முன்னங்கால் பாய்ச்சல் கொண்ட
எம் எல்லாளன் படையை
எதிர்க்கொள்ள வக்கற்றவனின்
நாசச்சுவடு மே 18!
கொத்துக்குண்டுகள் வீசி
லட்சம் உயிர் விழுங்கினாய்…

கோட்டைக்கட்டி வாழந்த இனத்தின்
கூடாரத்தையும்  குறிப்பார்த்து
காந்திய ராணுவம் வழிவகுத்து
இஸ்ரேலிய எறிகணை
தமிழர் தலைமீது விழுந்து
புலிபடையினை  வீழ்த்துவேனென்று
நாடு நாடாய் ஊர் ஊராய்
இருபத்தோர்  தேசமெங்கும்
யாசகமெடுத்த வரிசையில்
ரேடார் இந்திரா இந்தியா
மீக்-29   சீனா
பல்குழால் பீரங்கி  பாகிஸ்தான்
கடன்காரனின்
இரண்டாயிரம் கோடி கடன்
சிங்களன்,இந்தியன் பெருமையுடன்
தமிழன் பொறுமையுடன்
…முள்ளிவாய்க்கால்

காமவெறி தணிக்க
திருப்பதியில் பரிகாரம்…
இந்தியாவில் நாய்க்கெல்லாம் அதிகாரம்…
இதன் பெயர்தான் போரா!
தமிழச்சி மாரறுத்தாய்
மாவீரர் துயில் இடித்தாய்
தம்பிகள் உயிரெடுத்தாய்
இதன் பெயரோ  போர்…

பன்னாட்டு சபையின்
அணுஆயித ஒப்பந்த
பரீட்சிய  கூடம்
முள்ளிவாய்க்கால்!
முள்வேலிக்குள் அடைத்த பெரும்
ஒப்பந்தம்!
எம்மின துரோகிகளுக்கு பதவி
இது,எம்மின எதிரியின் பெரும் உதவி…

இன்னும் எங்களை
என்னவென்று நினைத்தாய்!
கற்கள் என்றா ?
முற்கள் என்றா ?
புலிகள்  என்றுதானடா  தடைவிதிதாய்!!
எச்சில் பட்ட எம்தேசத்தை
புலிகளே மீட்டெடுக்கும்
அண்ணன் களத்தில் போராடுவார்!
தம்பிகள்
நாங்கள் புலத்தில் போராடுவோம்!!
அண்ணன் எழுப்பிய விடுதலைதீ!
முத்துக்குமார் மூட்டிய செந்தீ!!
முள்ளிவாய்க்கால் மூட்டிய  பெருந்தீ!!!

தாயக தியாகங்கள்…

எங்கள்
மாவீரர்களே !

கண்முன்னே மழுங்கிய
மானத்தை உயிரின்
உச்சமாய் காத்த
காவலர்களே !

இன்னுயிரின் ஈகையால்
தமிழை ஒளிர்வித்த
சுடர்களே !

விடுதலை நினைத்து
உடலை வெடித்து
எரிகணையாய் வாழ்ந்த
தேவர்களே !

நீங்கள்
விதையாய் விழுந்து
மண்ணில் மடிந்த
வீரர்களே !

கண்ணீர் விடியும்
வேதனை,சோதனை
வீரத் தியாகங்களை
கண்டு விலகிடுமே…
தமிழீழம் விடிந்திடுமே !

புலிகள் வரலாற்றை
உலகம் சுமந்திடுமே !!

இறுதி மூச்சு !

வல்வெட்டித்துறையில்
சூரிய புதல்வனை
பெற்றெடுத்த
உன் மூச்சு பனகொடா
சிங்களவன் முகாமிலா
நிற்கணும் !
அய்யோ
பகலவனை வளர்தெடுத்த
பாச கீற்று
இங்கோ போகணும் !
இன்று தமிழர்
உளம் வெதும்பி
இருண்டா சாகணும்…
அப்புவே தலைவனை
சுமந்த உன் மூச்சு,
இறுதி மூச்சின்
அனல்
ஈழத்தில் எரியுது
பார் இன்னும்…
தியாக மூச்சால்
விடியும் நம் மண்ணும் !!!

விடுதலைக்கே தவிக்கிறோம் !  

தாயே தமிழீழதாயே
உன்னைவிட்டு நெடுந்தூரம்
போகிறோம் !

முடிசூடும் மண்ணே
ஒருபிடி மண்ணின்றி  மண்ணோடு
சாய்கிறோம் !

பொங்குநீரோடு நுரையாய்
கரைமோதும் கடலே
கரையேற்றும்  படக்கோட்டியாய்
அலைகிறோம் !

ஏளனமாய் சிரிக்கும்
தறுதலைகள் பகையை
விடுதலை தகையில்
சரிக்கிறோம் !

ஒய்யாரமாய் ஓய்ந்திட
விடுதலையென்ன
கேலிக்கை  கூத்தோ…
ஒடுங்கி ஒழிந்திட
ஈழமென்ன
உரிமையில்லா சொத்தோ…
மீண்டும்
பிறக்கிறோம் !

வதைத்த சிதைவிலிருந்து
புதைத்த விதையிலிருந்து
வலிதாங்கும் வேங்கையாய்
தளிர்கிறோம் !

விடுதலையென்றதுமே
வெடிக்கிறோம் !

இருந்தும்
வாழ்கிறோம் !

தலைவன் வருவானென்று
தமிழீழம் மலருமென்று
புலம்பெயர்ந்தும் தமிழராய்
பூக்கிறோம் !

உளமுண்ர்ந்து பட்டொளிவீசிடும்
புலிக்கொடியோடு கீதம்
படிக்கிறோம் !!

யாரென்று நினைத்தாய் தமிழனை ?…                 

அடிப்பட்டே மாண்டிடும்
கோழையா?
உணர்ச்சியற்ற முடவனா?
ஒளியற்று உதிரும்
சூரியனா?
யாரென்று நினைத்தாய்
தமிழனை?…

வீரம் செறிந்த இனம்
மானம் போற்றும் சினம்
வாரி வழங்கும் மனம்
நாங்களின்று பிணம்…
பிணத்தையும் நக்கும்
சிங்கள ஆதிக்கம்!
யாரென்று நினைத்தாய்
தமிழனை?…

தமிழுணர்ச்சியின் சீற்றம்
பாய்ந்திடும்
புலியின் தோற்றம்
உணர்ச்சியற்ற மறவர்களிடையே
உணர்ச்சி வசப்படும்
புலித்தமிழர்கள் !…
எம்மை இனி தொட்டால்
பிணமாவாய்…
கடலோரம் சுட்டால்
சிங்களநாயே நீ
புலிக்கு இரையாவாய் …
அடையாளம் இழந்தே
நீ சாவாய்…
யாரென்று நினைத்தாய்
தமிழனை ?…

தமிழன் மீது
தேசிய பாதுகாப்பு சட்டம்!
ராசபக்சேவோடு
தேசிய பாதுகாப்பு ஒப்பந்தம்!!
மெய்க்கு சட்டம்
ஏற்றும் குற்றம்!
பொய்மைக்கு தேசியவாதி
பட்டம்!!
கொடையாளி காங்கிரசுக்காரன்
கொலையாளி பௌத்தன்
உளவாளி கருணா(க்கள்)
பகையாளி தமிழன்
இந்தியாவுக்கு பங்காளி
சிங்களன்…
எதிராளி தமிழன்
இந்திய குடிமகனாம்…
யாரென்று நினைத்தாய்
தமிழனை?…

திமிறி எழும் தமிழர் படை
நடுங்கி சாகும்
எதிரியர்  படை…
தமிழீழம் தமிழீழமே
தமிழர்க்கு விடை!
உற்ற எம்உரிமையினை
தடுக்கும் எத்தடையும்
பிரபாகரன் படைமுன்
சாயும்…
புலிப்படை சாதிக்கும்…

அணையாத செந்தணல்

முத்துக்குமரா முத்துக்குமரா
எழும்பாத உணர்ச்சி
நரம்பு புடைக்க,
தணலாகிய முத்துக்குமரா…

பொசிங்கிய உடலாலே
சதையை உணர்வாக்கிய
முத்துக்குமரா…

கரும்புலி போல கருகிய
உணர்ச்சிக்குமரா
தீயாலே தீபமாகிய
வீரக்குமரா…

குருதிக்கடல் கொப்பளிக்க
தீச்சூட்டில்
உன்னை ஏற்றினாய்…

உளம் வெதும்பும்
உடல் கொதிக்கும்
தணலிலே
உன்னைக் காட்டினாய்

வீரம்,மானம்
மனிதம் சிதைய
உன்னை நீயே
தழலாக்கினாய்…
நொடியின் கணம்
உன்னை மாய்த்து
சாவின் ரணம்
உணர்ந்துவிட்டாய்…
மனதற்றவர் மதியற்றவர்
சேர்க்கையை
உணர்த்திவிட்டாய்…
தமிழன் அணி திரள
உசுப்பிவிட்டாய்…
முத்துக்குமரா முத்துக்குமரா
உணர்ச்சி தழலென்று
காட்டிவிட்டாய்…

முடங்கிய இனத்தின்
முடிவில்
தொடங்கிவைத்தாய்…
முணங்கிய வேதனையினை
மூட்டிவிட்டாய்…
முத்துக்குமரா முத்துக்குமரா
எழுப்பிவிட்டாய்…

புலியின் தடை தகற
தழலாலே மூண்டுவந்து
பலியான உற்றார் மீள
உடல் உருக்கி
பெரும் படை திரட்டினாய்…
உளம் உருக
தமிழரை மாற்றினாய்…
முத்துக்குமரா முத்துக்குமரா
இன்றும் எங்கள்
நெஞ்சில் வாழ்கிறாய்…
தழல் சூழ்ந்த
மாவீரனாய்…

முத்துக்குமரா முத்துக்குமரா
மூண்ட தீயில்
வெடியாகிய தீக்குமரா
என்றும் உன் தழல்
அணையாது…
தமிழர் தாகம்
தணியாது…