‘ காங்கிரஸ் மிகப் பெரிய ஊழல் கட்சி ’ என்று குற்றம் சாட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்! காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லி மாநில முதல்வராக பதவியேற்றார்!

ramlila delhi

kegriwal

டெல்லி மாநில முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

முன்னதாக மெட்ரோ ரயிலில் பயணித்து பதவியேற்பு விழா நடைபெற்ற ராம் லீலா மைதானத்திற்கு வந்தார்.

ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற விழாவில், திரளான பொதுமக்கள்  முன்னிலையில், டெல்லியின் 7- வது முதல்வராக கெஜ்ரிவால், ன்று (28.12.2013) நண்பகல் 12 மணி அளவில் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியா, ராக்கி பிர்லா, சோம்நாத் பார்தி, சவுரவ் பரத்வாஜ், கிரிஷ் சோனி, சதேந்திர ஜெயின் ஆகிய 6 பேருக்கும் ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி முடிவடைந்ததும் மக்களிடையே உரையாற்றிய கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியை தேர்ந்தெடுத்ததற்காக டெல்லி மக்களுக்கும், கடவுளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்களுடன் இணைந்து ஊழலை ஒழிக்கப்போவதாகவும், டெல்லியின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

நம்மால் தேர்தலில் நேர்மையாக போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என்பதை மக்களுக்கு காட்டியுள்ளதாகவும், நேர்மையான பாதையில் சென்றால் இறுதியில் வெற்றி பெற முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

மக்களின் ஒத்துழைப்புடன் ஊழல் அடிமட்டத்திலிருந்து களையப்படும் என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் தொடர்பாக புகார் அளிக்க இன்னும் 2 தினங்களில் தொலைபேசி எண் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். டெல்லி அரசு அதிகாரிகளை கொண்டு இயங்காது என்றும், மக்களே அதனை வழிநடத்துவர் என்றும் அவர் மேலும் கூறினார்.

வேறுபாடுகளை மறந்து மக்களுக்கு சேவை செய்ய பிற கட்சிகளும் முன்வர வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார். உரையாற்றிய பின்னர்  ராஜ்காட்டுக்குச் சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் தலைமைச் செயலகம் சென்று முதலமைச்சருக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே இன்று பிற்பகல் 2 மணிக்கு, புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், டெல்லி ஆட்டோ டிரைவர்கள் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தனது அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடுகளை செய்துள்ளார்.

அதன்படி, மின்சாரம் மற்றும் நிதித்துறை இலாகாக்களை கெஜ்ரிவாலே வைத்துக்கொண்டுள்ளார்.

சோம்நாத் பார்திக்கு உணவு மற்றும் விநியோகத் துறை வழங்கப்பட்டுள்ளது.

சவுரவ் பரத்வாஜுக்கு போக்குவரத்து துறையும், கிரிஷ் சோனிக்கு சுகாதாரத்துறையும், ராக்கி பிர்லாவுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறையும், மணீஷ் சிசோடியாவுக்கு கல்வி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பொதுப்பணித்துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

‘காங்கிரஸ் மிகப் பெரிய ஊழல் கட்சி’ என்று குற்றம் சாட்டியவர் அரவிந்த் கெஜ்ரிவால். அப்படிப்பட்ட கட்சியின் ஆதரவைப் பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பது  எப்படிச் சரியாக இருக்க முடியும்?

ஆம் ஆத்மிக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் காங்கிரஸுக்கு எதிரான வாக்குகள். அப்படி இருக்கும்போது காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது சகிக்க முடியாதது.

நாங்கள் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவில்லை, ஆதரவுதான் கேட்கிறோம்’ என்று கெஜ்ரிவால் சொல்வதைப் பார்த்தால், அவர் தேர்ந்த அரசியல்வாதிபோலப் பேச ஆரம்பித்துவிட்டதாகவே தெரிகிறது.

இதன் மூலம், அடுத்து நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை எதிர்க்கும் தார்மீக உரிமையை கெஜ்ரிவால் இழந்துவிட்டார். அவருக்கு ஆதரவு தருவதன் மூலமாக அவருக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கைக் குறைக்கும் முயற்சியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டது.

ஆம் ஆத்மி ஆட்சியின் ஆயுள் காலம் இப்போது காங்கிரஸ் கையில் சிக்கியுள்ளது. ‘எதிரியின் ஆயுதத்தை கேலி செய்வதைவிட, அதை தந்திரமாக பிடிங்கி கொள்வது புத்திசாலிதனம்’ என்பதை இவ்விசியத்தில் காங்கிரஸ் நிரூபித்து விட்டது.