பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (31.12.2013) ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது சட்ட விரோதமாக, மனிதாபிமானமற்ற முறையில் இலங்கை கடற்படையால் கடத்திச் சென்று சிறை வைக்கப்பட்டு இருப்பது பற்றி மிகுந்த வேதனையுடன் உங்களுக்கு நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
கடந்த 12.12.2013 அன்று 15 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றிருந்த 111 அப்பாவி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கடத்திச் சென்று சிறை வைத்துள்ளது.
28–12–2013 அன்று புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 22 பேர் 6 படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் கடத்தப்பட்டனர். 29–12–2013 இரவு பாம்பனைச் சேர்ந்த 18 மீனவர்கள் 3 கட்டு மரங்களில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டனர்.
இந்த மாதத்தில் மட்டும் இலங்கை கடற்படை 6 தடவை நடுக்கடலில் அத்துமீறலில் ஈடுபட்டு தமிழக மீனவர்களை கடத்திச் சென்று சிறை வைத்துள்ளது. தொடர்ச்சியாக மீண்டும், மீண்டும் நடைபெறும் இந்த சம்பவங்கள் தமிழக மீனவ சமுதாய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28–12–2013 அன்று சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்பட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 22 மீனவர்களும் 10–1–2014 வரை இலங்கை சிறைகளில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மறுநாளே பாம்பன் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்று விட்டது.
பாக்ஜலசந்தியில் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு வாழ்வாதார உரிமை உள்ளது. அதை இலங்கை மீண்டும், மீண்டும் சட்ட விரோதமான முறையில் தடுத்து வருகிறது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை, தவறான அறிவுரையால் இலங்கைக்கு விட்டுக் கொடுத்து செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் இத்தகைய சம்பவங்களை தடுக்க பல முறை கூட்டு அறிக்கை மற்றும் அறிவிப்புகளை வெளியிட்ட போதிலும் இலங்கை கடற்படை, அப்பாவி தமிழக மீனவர்கள் மீது ஏற்க முடியாத, கொடூரமான தாக்குதல்களையும் துப்பாக்கியால் சுடுவதையும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்திய அரசு பலவீனமான முறையில் நடந்து கொள்வதால் தான் இலங்கை கடற்படையினர் துணிச்சல் பெற்று தமிழக அப்பாவி மீனவர்கள் மீது தொடர்ந்து கொடூர தாக்குதல்களை நடத்துகிறார்கள்.
இலங்கை கடற்படையால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த திட்டமிட்ட தாக்குதல்களுக்கு உறுதியான முடிவு கட்டப்பட வேண்டும். அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் மிகவும் கொடூரமாக தாக்கப்படும் போது, அதை இந்திய அரசு பொறுத்துக் கொள்ளக் கூடாது.
நான் உங்களுக்கு எழுதிய முந்தையக் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளது போன்று, அப்பாவி தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது, டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதரை மத்திய வெளியுறவுத் துறை மூலம் அழைத்து நமது கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்ய வேண்டும். அதோடு இந்த பிரச்சினையில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, அப்பாவி தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும் அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதற்கும் முடிவு கட்ட வேண்டும்.
20.9.2013 அன்று உங்களுக்கு நான் எழுதிய கடிதத்தில், ‘‘இலங்கை அரசின் செயல்பாடுகளால் நிலவும் சூழ்நிலைகள், பாக்ஜல சந்தியில் மீன் பிடிக்கும் அப்பாவி தமிழக மீனவர்கள் கடத்தப்படுவது தமிழக மீனவர்களின் படகுகள் நடுக்கடலில் சேதப்படுத்தப்படுவது, இலங்கை கடற்படையால் சட்ட விரோதமாக பிடித்துச் செல்லப்பட்டு இலங்கை சிறைகளில் நீண்ட காலமாக வைக்கப்பட்டிருப்பது போன்றவை தினம், தினம் நடப்பதால் நம்முடைய மீனவர்கள் இந்த பிரச்சினையை இலங்கை மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.
நமது மீனவர்கள் கடத்தி, சிறை வைக்கப்படுவது நீடிப்பதால், தமிழக கடலோர மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் மீனவ அமைப்புகள் அந்த பேச்சுவார்த்தையை நடத்த இடம் மற்றும் நேரத்தை தீர்மானிக்குமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
தமிழக மீனவ அமைப்புகளின் விருப்பம் மற்றும் இரு நாட்டு மீனவர்களும் சந்தித்துப் பேச வேண்டும் என்ற அவர்களின் உணர்வினை ஏற்று தமிழ்நாடு அரசு 23–12–2013 அன்று எழுதிய கடிதத்தில் தமிழக–இலங்கை மீனவர்களிடையிலான அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தையை சென்னையில் வரும் 20–1–2014 அன்று நடத்துவது என்று பரிந்துரை செய்துள்ளது. அந்த பேச்சு வார்த்தையின்போது பேசப்பட வேண்டிய விஷயங்கள் மற்றும் அந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்பவர்களின் பட்டியலை இந்திய அரசுக்கு ஏற்கனவே தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
மத்திய அரசும் இதை ஏற்றுக் கொண்டதாக பத்திரிகைளில் செய்தி வெளியானது. என்றாலும் இந்திய அரசிடம் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வமான உறுதியை நாங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, தமிழக அரசு ஒருமித்த அணுகுமுறையில் ஈடுபட்டுள்ள நிலையில் நமது மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், சட்ட விரோதமாக கடத்தப்படுவதும் துரதிர்ஷ்டமாகும். இந்த தாக்குதல்கள் தொடர்ந்தால் அது இரு நாட்டு மீனவ அமைப்புகளின் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு ஒரு உகந்த சூழ்நிலையை உருவாக்காது.
எனவே இந்திய அரசு உடனே இதில் தலையிட்டு, வலுவான நடவடிக்கை எடுத்து, தமிழக மீனவர்கள் கொடூரமாக தாக்கப்படுவதையும், கடத்தப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை சிறைகளில் பல மாதங்களாக வாடிக்கொண்டிருக்கும் 216 தமிழக மீனவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
அவர்களது 72 மீன்பிடி படகுகள் இன்னமும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன.
கடந்த 28–12–2013, 29–12–2013 அன்று கடத்தப்பட்ட 40 மீனவர்களும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே இலங்கை சிறைகளில் உள்ள 256 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு தூதரக மட்டத்தில் தொடர்பு கொண்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்களின் 81 மீன் பிடி படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் எழுதி உள்ளார்.