மலேசியாவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த விமானத்தின் பயணத்தை மாற்றி தான் இலங்கை திரும்புவதற்காக அதனை சிங்கப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க செய்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவையின் தலைவரது நடவடிக்கையால் நிறுவனத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின் தலைவரும் இலங்கை ஜனாதிபதியின் மைத்துனருமான நிஷாந்த விக்ரமசிங்க, தனது மனைவி மற்றும் விருந்தினர் ஒருவருடன் அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்தார்.
அங்கிருந்து இலங்கை திரும்புவதற்காக தனது விருப்பத்திற்கு அமைய நிறுவனத்தின் விமானம் ஒன்றை சிங்கப்பூருக்கு வரவழைத்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இது குறித்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
விமான சேவை நிறுவனத்தின் தலைவர் விரும்பிய நேரத்தில் விமானத்தை வரவழைக்க அது தனியார் பஸ் சேவையல்ல. கடந்த வருடத்தில் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் 2 ஆயிரத்து 650 கோடி ரூபா இழப்பை சந்தித்தது. நிறுவனத்தின் தலைவர் பஸ் சங்கம் ஒன்றின் தலைவரை போல் செயற்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்து கடிகாரம் காணாமல்போன பின்னரே அவரது உண்மையான சொத்து விபரம் வெளியில் தெரியவந்தது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவர் தனது சொத்து விபரங்களை வெளியிடவில்லை. உயர் மட்டத்தில் இருக்கும் ஆதரவு காரணமாகவே இவர்கள் இப்படி செயற்படுகின்றனர்.
விமானம் ஒன்றை தரையிறக்கி மீண்டும் புறப்பட்டுச் செல்ல குறைந்த பட்சம் 30 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் செலவாகும். நேரடியாக கொழும்பு நோக்கி வரும் பயணிகளே விமானத்தில் பயணித்துள்ளனர். அவர்களின் பயணத்தை மாற்றியதன் காரணமாக விமான சேவை குறித்து அவர்களுக்கு வெறுப்பு ஏற்படும். இதனால் விமானத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறையும்.
பயணிகள் பயணம் செய்வது குறைந்தால் விமான சேவை நிறுவனத்தின் தலைவரால் பயணிகளை பெற்று கொடுக்க முடியுமா? என்றார்.