ஐரோப்பாவிலும், வடஅமெரிக்காவிலும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வைத்திருந்த வாகன பாதுகாப்பு நடைமுறைகளையே தற்போது இந்தியாவிலுள்ள 5 சிறிய ரக கார்கள் கொண்டிருப்பதாக வாகனங்களின் பாதுகாப்பு தொடர்பாக பரிசோதிக்கும் க்ளோபல் என்சிஏபி (Global NCAP) என்ற நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்தியாவில் பிரபலமாக உள்ள சில கார் வகைகள் விபத்து பாதுகாப்பு பரிசோதனையில் தோல்வி கண்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த கார்கள் பாதுகாப்பற்றவை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
உலகின் மிக விலைகுறைந்த காரான டாட்டா நானோவும் இந்த பாதுகாப்பு பரிசோதனையில் தோல்வி கண்டுள்ளது. இதுதவிர, ஃபோர்ட், வோல்க்ஸ்வேகன் மற்றும் ஹையுண்டாய் போன்ற உலக நிறுவனங்கள் இந்திய சந்தைக்காக தயாரித்து விற்கும் கார் ரகங்களும் கூட இந்த சோதனையில் வெற்றிபெறவில்லை. இந்த கார்கள் எல்லாம் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றவை.
உள்ளூர் சந்தையில் விலை குறைந்த கார்களுக்கு ஏற்பட்டுள்ள நல்ல கிராக்கி காரணமாக, காற்றுப் பைகள் (ஏர் பேக்) போன்ற விபத்து பாதுகாப்பு கருவிகளை நீக்கிவிட்டுத் தான் இந்தக் கார்கள் குறைந்த விலையில் சந்தைக்கு வருகின்றன. உலகில் ஏனைய நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகளவு சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடக்கின்றன.