கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு திருவிழா தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தலைமையில் கடந்த 28 -ம் தேதி நடைபெற்றது. இதன் போது அவர் தெரிவித்துள்ளதாவது:-
கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் கடந்த ஆண்டு திருவிழாவுக்கு இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். எனினும் இந்த வருடம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 -ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் இருந்து செல்லும் பக்தர்களுக்கு அன்றைய தினம் காலையில் இருந்து விசேட படகுச் சேவைகளை குறிகாட்டுவானில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். கச்சதீவில் பக்தர்களின் தேவைகளுக்காக குடிதண்ணீர், கழிப்பறை வசதிகளும் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்படும்.
“வடக்கின் வசந்தம்” திட்டத்தின் 4 மில்லியன் ரூபாய் நிதியில் 80 கழிப்பறைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெடுந்தீவு பிரதேச சபை இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும். அத்துடன் பக்தர்களின் உணவுத் தேவைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கடற்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுவார்கள் என்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார்.