இலங்கை தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் திருகேதீஸ்வரம் கோயிலுக்குச் செல்லும் பிரதான வீதியில் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி புதைகுழியில் மனித எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மனிதப் புதை குழியில் கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை 62 மனித மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்னமும் தோண்டும் பணிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில் தற்போது, கிழக்கு மகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் மனிதப் புதை குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருகோணேஸ்வரர் கோயிலுக்கு செல்லும் பிரதான வீதியில், திருகோணமலை நகரசபையின் பின்பக்கம் உள்ள மக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த மக்கெய்சர் விளையாட்டரங்கு புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கான கிணறுத் தோண்டும் முயற்சியில் 12.02.2014 புதன்கிழமை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 அடி வரை தோண்டிய நிலையில் மனித எலும்புக் கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுவரை மூன்று எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும், உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்குமென்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் பரவியதும், அந்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இராணுவத்தினரின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் அந்த பிரதேசம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட எவரையும் அந்தப் பகுதிக்கு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. 13.02.2014 காலை முதல் திருகோணமலை புறநகர் பொலிஸார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
13.02.2014 மாலை 5.30 மணியளவில் திருகோணமலை நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா சம்பவ இடத்துக்கு வருகை தந்தார். எலும்புக் கூடுகள் காணப்பட்ட இடத்தை அவர் பார்வையிட்டார். அவருடன் தொல் பொருள் திணைக்களத்தினரும், மருத்துவ அதிகாரிகளும் வந்திருந்தனர். எதிர் வரும் 17.02.2014 திங்கட்கிழமை வரைஅந்த பகுதியை பாதுகாப்புப் பிரதேசமாக நீதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார்.
அந்த பிரதேசம் நீண்டகாலமாக திருக்கோணேஸ்வரர் கோயிலின் பிரதான வாயிலினுள் அமைந்துள்ள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் மனித எலும்பு கூடுகள் எப்படி வந்தன? இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர்.
இலங்கையில் நடந்த யுத்தத்தின் போது அப்பாவி தமிழ் மக்களையும், இளைஞர்களையும் ஈவு இரக்கமில்லாமல் சிங்கள இராணுவத்தினர் சீரழித்து சித்திரவதை செய்து கொடூரமான முறையில் கொன்றார்கள். இறுதியுத்தத்தின் போது ஆயிரக்கணக்கானோர் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள். ஆயிரக்கணக்கானோர் மர்மமான முறையில் தொலைந்தும் போனார்கள். இவர்களின் நிலைமை என்னானது என்று இதுவரை தெரியாத நிலையில், இதுப்போன்று புதைகுழிகளில் மனித எலும்பு கூடுகள் தென்பட்டுவருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.