இந்திய உச்ச நீதிமன்றம், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கோரிக்கை மனுக்களை ஏற்று, அவர்களுடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 18.02.2014 அன்று தீர்ப்பளித்ததோடு, ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் என்றும்; எனினும் குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433-ன்படி, அரசு எடுக்கும் தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் , 3 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளிவந்தவுடன், உடனடியாக இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். அதன் பின் 19.02.2014 அன்று காலை முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறைச்சாலையில் இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது.
இதேபோன்று, ஏற்கெனவே ஆயுள் கைதியாக 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதை தமிழக சட்டசபையில் விதி எண்: 110-ன் கீழ் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிக்கையாக தாக்கல் செய்தார்.
இப்பிரச்சனை இந்தியா முழுவதும் பரப்பரப்பாக பேசப்பட்ட அதே நாள், இந்திய இராணுவத்தின் தென்பிராந்திய தளபதி லெப்.ஜெனரல் அசோக் சிங் தலைமையிலான மூவர் குழு இலங்கைசென்று இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை தளபதிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இலங்கையில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த போது உயிரிழந்த இந்திய சிப்பாய்களது நினைவுத்தூபிக்கு இந்திய இராணுவத்தின் தென்பிராந்திய தளபதி அசோக் சிங் அஞ்சலி செலுத்தியுள்ளார்.