அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை, தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று (25.02.2014) வெளியிட்டார். ஒட்டுமொத்த தேசத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்ற திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்ப் பிரதியை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வெளியிட, நிதியமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார் ஆங்கிலப் பிரதியை கழக அமைப்புச் செயலாளர் டாக்டர். விசாலாட்சி நெஞ்செழியன் பெற்றுக்கொண்டனர்.
தேர்தல் அறிக்கையில், தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் நலன், கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட வாக்குறுதிகளும், அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மதச்சார்பின்மை கொள்கையை தொடர்ந்து நிலைநாட்ட நடவடிக்கை, தனி ஈழம் அமைந்திட இலங்கைத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும், உணவு பாதுகாப்புத் திட்டத்திற்கு பதிலாக பொதுவிநியோகத் திட்டம், ஐ.நா.சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டினை அனுமதிப்பதில்லை, மகளிருக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் தேசிய அளவில் அமல்படுத்த நடவடிக்கை, மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை, மகளிருக்கான இடஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்வது, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை, உள்ளிட்ட அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்க நடவடிக்கை எடுப்பது போன்றவை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.