நீர்முழ்கி கப்பலில் தீ : இந்திய கடற்படை தளபதி ஜோஷி ராஜினாமா

D.K.JOSHIindia_sindhuratna

மும்பை அருகே இன்று (26.02.2014) கடற்படை நீர்மூழ்கி கப்பல் ஒன்றில் தீ பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் சிந்து ரத்னா என்ற நீர்மூழ்கி கப்பல் தர பரிசோதனைக்கு பிறகு அரபிக் கடலில் செலுத்தப்பட்டது.

மும்பையில் இருந்து 60 கி.மீ தொலைவில் சென்று கொண்டிருந்த போது திடீரென கப்பல் இயந்திர பகுதியில் தீப்பிடித்து புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நீர்மூழ்கி கப்பல் கடலின் மேற்பரப்புக்கு கொண்டுவரப்பட்டது.

தீ விபத்து காரணமாக எழுந்த புகையில் சிக்கி 5 கடற்படை வீரர்கள் மயக்கமடைந்தனர். இவர்கள் உடனடியாக கடற்படை ஹெலிகாப்டர் மூலம் மும்பை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நீர்முழ்கி கப்பலில் இருந்த கடற்படை அதிகாரிகள் 2 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

விபத்துக்குள்ளான நீர்மூழ்கி கப்பலில் ஆயுதங்கள் ஏதும் இல்லாததால்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதே நீர்மூழ்கி கப்பலில் இருந்த மேற்கு கடற்படையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

தர பரிசோதனைக்கு பிறகு சோதனை ஓட்டம் சென்ற நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் கடற்படை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்  மாதம் மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஐ.என்.எஸ் சிந்து ரக்ஷிக் நீர்மூழ்கி கப்பலில் பயங்கர வெடி சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டதில் 18 கடற்படை வீரர்கள் பலியானார்கள். கடந்த 7 மாதத்தில் மட்டும் 3 முறை விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர் விபத்துகள் ஏற்பட்டதால், இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்திய கடற்படை தளபதி டி.கே.ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பாதுகாப்பு அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அத்துடன், புதிய தளபதி நியமிக்கப்படும்வரை, ஆர்.கே.தோவன் தற்காலிக கடற்படை தளபதியாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.