16–வது பாராளுமன்ற தேர்தலுக்கான அட்டவணை இன்று (05.03.2014) வெளியிடப்பட்டது. தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத், ஆணையர்கள் எச்.எஸ்.பிரம்மா, எஸ்.என்.ஏ. ஜைதி ஆகியோர் தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட்டனர்.
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மாதம் 7–ந்தேதி தொடங்கி மே மாதம் 12–ந்தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 24–ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் ஆலந்தூர் தொகுதிக்கான இடம் காலியாக உள்ளது. அந்த தொகுதியில் இருந்து தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற பண்ருட்டி ராமச்சந்திரன் சமீபத்தில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் காலியான ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கு 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டும் என்பது விதியாகும். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் வந்ததால், அதனுடன் ஆலந்தூர் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாட்டில் ஆலந்தூர் சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் 24–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் போது, ஆலந்தூர் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.