பெண் சிசுக் கொலையை முற்றிலும் ஒழித்திடவும், இறப்பின் பிடியிலிருந்து குழந்தைகளை காப்பாற்றவும் உலகிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தைத் திட்டம் 1992-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. தொட்டில் குழந்தைகள் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியவர் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா. இந்தத் திட்டம் அன்னை தெரசாவின் பாராட்டைப் பெற்றத் திட்டமாகும்.
தமிழகத்தில் எந்தக் குழந்தையும் அனாதையில்லை என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெற்றவர்களால் கைவிடப்பட்ட நிலையில் தொட்டில் குழந்தைகளுக்கு தாய், தந்தை ஸ்தானத்தில் இருப்பது தமிழக அரசுதான்.
2001ஆம் ஆண்டில் ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களைப் பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை செய்வது அல்லது பொது இடங்களில் வீசி எறிவது போன்ற செயல்கள் சில மாவட்டங்களில் அதிக அளவில் நடந்து வருகிறது.
இதனைத் தடுக்க அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்படுகின்றன. பெண் குழந்தைகளைக் கொலை செய்வதற்கு பதில், இத்தொட்டில்களில் குடும்பத்தார் இட்டுச் செல்கின்றனர். இக்குழந்தைகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டில் குழந்தை மையங்களால் வளர்க்கப்படுகின்றன.
பிறந்து ஒரு நாள் முதல் 30 நாள்களுக்குள்ளான குழந்தைகளை அரசுத் தொட்டிலில் விட்டுச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் அரசுத் தொட்டில்கள் ஏற்படுத்தப்பட்டன.
தருமபுரி மாவட்டத்தில் 40 இடங்களிலும், மதுரை மாவட்டத்தில் 30 இடங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 30 இடங்களிலும், தேனி மாவட்டத்தில் 15 இடங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 30 இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் 43 இடங்களிலும் அரசுத் தொட்டில்கள் அமைக்கப்பட்டன.
இத்தொட்டில்களில் விட்டுச் செல்லும் குழந்தைகளை சமூகநலத்துறை அதிகாரிகள் பராமரித்து, பின் அரசு அனுமதி பெற்ற தொண்டு நிறுவனக் காப்பகங்களில் ஒப்படைக்கவேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் அரசுத் தொட்டில் குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளன. இவை விதிகளுக்கு உட்பட்டு குழந்தைகளை யாருக்கும் தத்து கொடுக்கலாம்.
தமிழ்நாட்டில் 2001 ஆம் ஆண்டில் 1000 குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என இருந்த பாலின விகிதம் 2011 ஆம் ஆண்டில் 946 ஆக அதிகரித்துள்ளது. தொட்டில் குழந்தைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பெண் குழந்தை விகிதங்கள் அதிகரித்துள்ளது.
2001 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 1000 ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளின் விகிதம் தொட்டில் குழந்தைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் 851 லிருந்து 917ஆகவும், மதுரை மாவட்டத்தில் 926 லிருந்து 939ஆகவும், தேனி மாவட்டத்தில் 891 லிருந்து 937ஆகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் 930 லிருந்து 942ஆகவும், தருமபுரி மாவட்டத்தில் 826 லிருந்து 911ஆகவும் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்துள்ளது.
ஆனால், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்தது. இதைக் கருத்தில் கொண்டு தொட்டில் குழந்தைகள் திட்டத்தை விரிவாக்கம் செய்திட தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த திட்டத்தை ஜெ.ஜெயலலிதா கொண்டு வந்ததால், கடந்த கால தி.மு.க., அரசு இதில் ஆர்வம் காட்டாமல் கிடப்பில் போட்டது.
ஜெ.ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்றவுடன் இத்திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர்வூட்டி புதுப்பொழிவுடன் செயல்படுத்தி வருகிறார்.
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் முயற்சியால் உலகிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தைகள் திட்டம், இப்போது உலகத்திற்கே உதாரணமாக விளங்கும் திட்டமாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு நாடுமுழுவதும் நவீன வசதியுடன் தொட்டில் குழந்தைகள் திட்டத்தை சீன அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது.
பெற்றெடுத்த பிள்ளையை கைவிட விரும்பும் பெற்றோர்கள் அவற்றை பாதுகாப்பான இடத்தில் விட்டுச் செல்வதற்கான 25 நிலையங்களை நாட்டின் பல்வேறு இடங்களில் சீன அரசாங்கம் அமைத்துள்ளது.
சீன அரசாங்கம் அமைத்துள்ள நிலையங்களை குழந்தையை வெதுவெதுப்பாக வைத்திருக்கக்கூடிய (இன்குபேட்டர்) தொட்டில் இருக்கும், தவிர ஒரு குழந்தை அதில் போடப்பட்டால், பெற்றோர் வெளியேறிய பின்னர் காலம் தாழ்த்தி ஒலிக்கின்ற மணியும் உண்டு.
எங்கோ ஒரு இடத்தில் குழந்தையைக் கைவிட்டு பின்னர் அது கண்டெடுக்கப்படும்போது பல நேரங்களில் அக்குழந்தைகள் இறந்துவிடுகின்றன. இவ்வகையான நிலையங்களில் குழந்தையைக் கைவிடும்போது அக்குழந்தை பிழைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
மேலும், பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளில் பெரும்பான்மையானவை ஒன்றில் குறைபாடுள்ள குழந்தைகள் அல்லது கடுமையாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுமாக அமைந்துள்ளனர். பிள்ளையை கைவிடுவதற்கான இவ்வகையான இடங்களை மேலும் பல இடங்களில் அமைப்பதே அரசாங்கத்தின் திட்டம் என சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-டாக்டர் துரைபெஞ்சமின்
ஆசிரியர்