புழு, பூச்சிக்கள் நிறைந்த சாக்லேட்டுகள்! கவர்ச்சிகரமான காகிதத்திற்குள் ஒழிந்திருக்கும் ஆபத்துகள்!

 worum chelate

உலகில் உள்ள அனைவருக்கும், குறிப்பாகக் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தின்பண்டங்களுள் சாக்லேட்டும் ஒன்றாகும்.அனைத்து வெற்றிகளுக்கும், சந்தோசங்களுக்கும் அடையளாளமாக சாக்லேட்டைதான் அனைவருக்கும் நாம் வழங்குகிறோம். புழு, பூச்சிக்கள் நிறைந்த சாக்லேட்டுகளைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு சாக்லேட்டின்வரலாற்றை முதலில் பார்ப்போம்.

கிறிஸ்டபர் கொலம்பஸ் 16-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அப்போது அங்கு வாழ்ந்து வந்த மக்கள் சாக்லேட்களைப் பயன்படுத்தி வந்ததைக் கண்டு பின்னர் ஸ்பெயின் நாட்டுக்கு அதனை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

பழைய பதிவேடுகளின்படி சாக்லேட் கி.பி. 1350 ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் பயன்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வாழ்ந்து வந்த மக்கள் சாக்லேட்டை கோகா மரங்களில் இருந்து பெற்றனர். பின்னர் ஸ்பெயின் நாட்டிலும் சாக்லேட் திரவப் பொருள் ஓர் உணவாகப் பரவியது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலம் இது ஸ்பெயினில் மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்தது.

பிரான்சு நாட்டில் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அவர்கள் அதனை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. உணவுத் துறை வல்லுநர்கள் சோதனை செய்து, உடல் நலத்திற்குத் தீங்கு ஏதும் விளைவிக்காது என்று சான்றளித்த பின்னரே பிரஞ்சு அரசு 1650 இல் இதனை பொது மக்கள் அருந்துவதற்கான ஒரு பானமாக ஏற்றுக்கொண்டது.

பின்னர் 1657இல் பிரெஞ்சு நாட்டைச் சர்ந்த ஒருவர் லண்டனிலும், ஐரோப்பாவின் பிற நகரங்களிலும் சாக்லேட் பானம் விற்கும் கடைகளைத் துவக்கினார். அப்போது இது பணக்காரர்களின் பானமாகக் கருதப்பட்டது.

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் நாட்டைச் சார்ந்த ஒருவர் சாக்லேட்டை, பால் மற்றும் சக்கரையுடன் கலந்து ஒர் குளிர்பானமாக அறிமுகப்படுத்தினார்.

பின்னர் கெய்லர் என்ற ஸ்வீஷ் நாட்டைச் சார்ந்த ஒருவர் சாக்லேட்டைத் துண்டுகளாகவும், கட்டிகளாகவும் திட வடிவத்தில் உருவாக்கினார்.

இதற்கிடையில் காட்பரி சகோதரர்கள் எனப்பட்ட புரோஜான் மற்றும் பெஞ்சமின் என்ற இருவரும் பல்வகை வடிவங்களில், பல்வகை மூலப்பொருட்களைக் கொண்டு பல்வேறு வகையான சாக்லேட்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கோஹன்ரிட் ஜே. வான் ஹட்டன் என்ற டச்சு நாட்டு வேதியியல் அறிஞர் 1860 ஆம் ஆண்டில் சாக்லேட் திரவத்தை, சாக்லேட் தூளாக மாற்றக்கூடிய தொழில்நுட்பச் செயல் முறையைக் கண்டுபிடித்தார். இக்கோட்பாட்டின் அடிப்படையில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த டேனியல் பீட்டர் என்பவர் பால் சாக்லேட்டைத் தயாரிக்கத் துவங்கினார்.

இரண்டாம் உலகப்போரின் போது போர் வீரர்கள் உண்பதற்கென்று பலவகைச் சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் வகை வகையான சாக்லேட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வோரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனமும் தமது தயாரிப்பே சுவையிலும், ஊட்டத்திலும் சிறந்தது என விளம்பரப் படுத்துகின்றது.

குழந்தைகளே! அம்மா, அப்பாவிடம் அடம் பிடித்து காசு வாங்கியவுடன் என்ன செய்வீர்கள்? கடைக்கு ஓடி கண்ணாடிப் பேழைக்குள் இருக்கும் கண்ணைப் பறிக்கும் கவர்ச்சிகரமான வண்ணக் கலரில் உள்ள சாக்லேட்டைத் தானே வாங்குவீர்கள். அந்த வண்ணக் கலர் பிளாஸ்டிக் காகிதத்தையா உண்கிறீர்கள்? இல்லை, உள்ளே உள்ள சாக்லேட்டைத் தானே சாப்பிடுகிறீர்கள்.

சிறிய எடை கொண்ட சின்ன சாக்லேட் துண்டுக்கு கலர், கலராய் 3 வகை உறைகள் எதற்கு தெரியுமா? எல்லாமே நம்மளை ஏமாற்றத்தான்.  நாம் அந்த சாக்லேட் உறைக்கும் சேர்த்துத்தான் காசு கொடுக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

பிரபலமான கம்பெனிகள் தயாரிக்கும் சாக்லேட்டில் கூட புழு, பூச்சிக்கள் உற்பத்தியாகின்றன என்பது அதர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. காசு கொடுத்து சாக்லேட்டை மட்டும் நாம் வாங்கவில்லை, ஆபத்தையும் விலைக்கு வாங்குகிறோம் என்பதுதான் அதர்ச்சி அளிக்கும் உண்மை.

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை சேர்ந்த ஜேக் கியேட்டிங்(வயது 20) என்பவர் அப்பகுதியில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் ‘கேட்பரீஸ் டெய்ரி மில்க் சாக்லேட்’ ஒன்றை வாங்கினார்.

ஆசை ஆசையாய் கடையில் வாங்கிய கேட்பரீஸ் டெய்ரி மில்க் சாக்லேட்டை பிரித்து அதை சாப்பிட போனவர், அச்சாக்லேட்டில் கிடந்த பூச்சியைக் கண்டு அவர் அதிர்ச்சியானார். அதன் மேலுறையை பிரித்து விட்டு சாப்பிட முயன்ற அவர், சாக்லேட்டின் ஒரு பகுதி மட்டும் வழக்கத்துக்கு மாறாக புடைத்துக் கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார்.

அந்த பகுதியை இரண்டாக உடைத்த ஜேக் கியேட்டிங் அதிர்ச்சியால் உறைந்துப் போனார். உடனடியாக அந்த சாக்லேட்டை தனது செல்போன் கேமரா மூலம் படம் பிடித்த அவர், கேட்பரீஸ் நிறுவனத்தின் ‘டுவிட்டர்’ பக்கத்துக்கு அதை அனுப்பி வைத்து விளக்கம் கேட்டுள்ளார்.

‘இந்த சாக்லேட்டுக்குள் இறக்கை, கால் மற்றும் தலையுடன் ஒரு முழு குளவி செத்துப்போய் கிடக்கிறது. இது குறித்து உங்கள் நிறுவனத்தின் விளக்கம் என்ன? என அவர் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து, தங்கள் நிறுவனத்தின் சார்பில் ஒரு உயரதிகாரியை ஜேக் கியேட்டிங்-கிடம் அனுப்பி வைத்த கேட்பரீஸ் நிறுவனம் அந்த சாக்லேட்டை பரிசோதனைக்காக வாங்கி வைத்துள்ளது. பரிசோதனையின் முடிவுக்கு பின்னர் இந்த தவறு எங்கு? எப்படி நேர்ந்தது? என்பதை கண்டறிந்து, அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்பரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.இதேபோன்று சமீபத்தில் பிரபல கம்பெனிகளின் சாக்லேட்டுகளில் புழு, பூச்சிக்கள் நெளிந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சாக்லேட் சாப்பிடுவதால் உடல் பருமன், வயிற்றில் பூச்சிகள் உருவாகும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சாக்லேட்டிலேயே புழு, பூச்சிக்கள் உருவாகிறது என்பதைப் பார்க்கும் போது அதர்ச்சியாக இருக்கின்றது. இதற்கு பிறகும் இந்த சாக்லேட்டை சாப்பிட வேண்டுமா?

இனிமேல் காசு கிடைக்கும்போது, சாக்லேட் வாங்குவதற்கு பதிலாக பழங்களை வாங்கிச் சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அவற்றின் தோலும் எளிதில் மக்கிமண்ணுக்கு உரமாகும்.

 -டாக்டர்.துரைபெஞ்சமின்